மாண்பெல்லாம் பெண்ணுக்கே தான்!
யானுற்ற பேர்புகழ்
யாவும் புவியிதனில்
தான்வருந்தி ஈந்தவென்
தாய்க்காம்! - அனுதினமும்
காண்போர் வியந்திடவே
காரிய மாற்றுகின்ற
மாண்பெல்லாம் பெண்ணுக்கே தான்!
தன்னை உருக்கியே
தன்சுகம் தான்மறந்தே
பொன்பொருள் தந்துமே
போற்றியவள்! - அன்னைக்கே
நானிங்கு சேர்த்த
நலமெலாம் தாள்சேரும்
மாண்பெல்லாம் பெண்ணுக்கே தான்!
ஆண்களுக்கீடாக
அனைத்துத் துறையிலும்
பெண்களும் நீடுயர்ந்தார்
பேதமின்றி! - தன்கவலை
பெண்களே தீர்த்தார்
பெருமிதமாய் பேர்முழங்க
மாண்பெல்லாம் பெண்ணுக்கே தான்!
கற்புடைப் பெண்டிராம்
கண்ணகி சீதையாய்
பற்பலர் நாட்டிலுண்டு
பாருமே! - நற்பண்பு
பேணுதலில் யாருண்டு
ஈடு இவர்க்கிணை?
மாண்பெல்லாம் பெண்ணுக்கே தான்!
வெ. நாதமணி,
23/08/2013.