தொட்டாற் துவளும் மலர் இவளோ?

மொட்டு இதழ்களில் மென்மைதொடும்விரல்
தொட்டவை என்னது சர்க்கரையோ
வட்ட விழிகளில் கொட்டவிழித்துன்னை
கிட்ட நின்றுகாணல் சொப்பனமோ
எட்டி அணைத்தென்னை கொட்டும் குழவியென்
றிட்டஉன் முத்தமும் சொர்க்கமன்றோ
துட்டமனம் என்னை விட்டுந்தன் பின்னாலே
கட்டை நடை கொண்டு வந்திடுமோ

கொட்டும் மழைவிழக் குட்டை குளமெங்கும்
விட்டநீர் வெள்ளமென் றோடுதுவோ
கிட்டநீ வந்தித்தில் இட்ட உணர்வென்ன
மொட்டைமலைப் பாறை வீழ்நதியோ
கட்டில்லாக் காவலன் கட்டிடும் தாலியும்
கட்டழகே காலைக்கட்டுவதோ
கட்டில் கொள்ள உனைக் கட்டிடவோ அன்றி
காட்டுநிலாவென விட்டிடவோ

சட்டென ஓடிய வெண்முகில் வான்நிலா
தொட்டதோ வந்ததை முட்டுவதேன்
விட்டதும் வெண்ணிலா வெட்கமுடன் பக்கம்
சட்டென ஓடிப்பின் நிற்குதுபார்
எட்டென நீகொண்ட எல்லை யிட்டமேனி
எட்டென என்னையும் கேட்பதென்ன
நட்டம் எனதில்லை விட்டுநீ சென்றிடில்
பட்டு மலர்க்கணை தைத்திடும்காண்

வட்டுப்பனையுடன் பக்கமொருதென்னை
கட்டழகில் முன்னே காணுவதோ
சட்டெனநீயும் என் பார்வை முன்னேவரக்
கொட்டும்பனி கொள்ளல் நானல்லவோ
தட்டியருகினில் தங்கமே நீயணைந்
திட்ட தென்ன மலர் பூந்துகளோ
விட்டிருந்தால் மனம் பட்டிடும் பாடுகள்
சுட்ட அனல் கக்கும் தீமலையோ

பொட்டழகே எனைக் கண்டதும் உன்முகம்
சொட்டும் இளம்நகை சொப்பனமோ
முட்டி எனைவீழ்த்த இரட்டை முளைகொம்பு
ஒட்ட வருக்குது எப்படியோ
பட்ட கணைமதன் விட்டவிழியம்பு
திட்டமிட்டு எனைத் தள்ளுவதோ
முட்டைவிழி வேலைக் கொண்டு இதயத்தில்
கிட்டவந்து குத்த நொந்திடுமோ

முட்டும் காளையெனும் பெண்மை இதயத்தை
மெல்ல விழுத்தி யுடைப்பதற்கோ
சட்டை செய்யாதுநீ போவதென்ன - என்னைச்
சஞ்சலத்தில் கைகள் விட்டிடவோ
செட்டை கொண்ட பலபட்சியினம் விண்ணில்
வட்ட மடிப்பது போலவன்றோ
அட்ட திசையிலும் கொட்டிமலர்தூவ
பட்டில் நடைகொண்டு சுற்றுவமோ

எழுதியவர் : கிரிகாசன் (25-Aug-13, 3:38 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 79

மேலே