.............வெப்பமயம்..........
பசுமைக்காடாய் பரிமளித்தது புவனம்,
சிட்டுக்குருவிகள் பட்டுப்பூசிகளுக்கு சொர்க்கபுரி,
அமீபா முதல் யானைக்குட்டி வரையினிலும்,
எறும்பிலிருந்து திமிங்கலம்வரை எல்லோரின் இடம்,
வேடந்தாங்கல் சரனாலயங்களுக்கும் சரணாகதி உலகம்,
இவற்றினூடே கொஞ்சம் இடம் அறிவார்ந்த மனிதனுக்கும் !
இவன் அசுரனோ அரக்கனோ பூதமோ அல்ல,
அறிவியல் விஞ்ஞானம் மெய்ஞானத்தில் ஆற்றல் பெற்றவன்,
இவன் செய்ய இயலாததை செய்து காட்டுகிறவன்,
மாற்றங்கள் கொணருகிற ஒரு மகத்தான சக்தி,
எண்ணி வியக்கிற காரியங்கள் எப்போதும் செய்கிறவன்,
எல்லாம் தெரிந்த இவனிடம் எனக்குண்டு சில கேள்விகள் !
காடுகள் அழித்து வீடுகள் கட்டினாய் வசதியாய்,
அதனினால் காற்று இறுக்கப்பட்டு வேகம் இழந்தது,
உருவாக்குதலில் உருவான தூசிகள் விண்ணைத்தொட்டது !
மின்சாரமென்கிற மாபெரும் அற்புதம் கொணர்ந்தாய்,
எங்கும் ஒளிபரவி எல்லாம் பொலிவுற்றது வெளிச்சமாய்,
எனினும் தந்திக்கம்பிகளால் சிட்டுக்குருவி இனம் அழிந்தது !
தொழிற்சாலைகள் கட்டி புதிய வேகம் காட்டினாய்,
நாகரீகம் கொடிகட்டி அழுத்தமாய் கோலோச்சியது,
அதன் கழிவுநீர் கடைசியாய் கடலை சென்றடைந்தது !
கட்டிடங்கள் பலகட்டி புத்தம்புது தொழில்கள் செய்தாய்,
அத்தனைக்கும் ஆசைப்பட்டு செயற்கையே ஜெயித்தது,
அங்கங்கே வெளிப்பட்ட புகையில் வளிமண்டலம் வலிபெற்றது !
பாலித்தீன் என்றொரு அழிக்கமுடியாத பொருள் செய்தாய்,
பைகளும் பட்டாடைகளும் பதுங்கியது அதற்குள்ளே,
மக்கிப்போகாத அதன் தன்மை கொத்திக்குதறியது மண்ணை !
காடுகளால் கிடைத்த காற்றெல்லாம் கிடைக்காதுபோனது,
வெப்பம் அதிகப்பட்டு உருகிவழிந்தது பனிமலைகள்,
அதன் காரணத்தால் உயர்ந்தது உயரே கடல்மட்டங்கள் !
விளைநிலங்களை விரிவாக நீ ஆக்ரமித்தாய் மொத்தமாய்,
ஆனாலும் புதிதுபுதிதாகவே உணவுகள் படைத்தாய்,
பராமரிப்பும் பாசமுமில்லாமல் அழிந்தது பயிரினங்கள் !
கடலையும் விடாமல் கப்பல்கள் நீர்மூழ்கிகள் விட்டாய்,
அணுகுண்டுகளையும் அணுசோதனையையும் நிகழ்த்தினாய்,
இறந்துபோயின அங்கே எண்ணற்ற உயிரினங்கள் !
வானத்தில் நமக்கொரு தடுப்புச்சுவர் உண்டு ஓசோன் என்று,
இருபத்தைந்து மைல்கல் படர்ந்துகாக்கிறது சூரியனிலிருந்து,
அதையும் துளைத்திருக்கிறது நம் அசாதாரண அழுக்குப்புகை !
இப்படி இன்னும் எத்தனையோ கொடிய விஷயங்கள்,
முனைப்பாய் நடக்கிறது நமை நாமே அழித்துக்கொள்ள,
இயற்கை அன்னை என்கிறோம் நாம் நா கூசாமல்,
பிறகு ஏன் அவளை கோரமும் அசிங்கமும் படுத்துகிறோம்?
விதியை தாண்டிப்பார்க்கிற செயல் நமையே அழிக்காதா?
தூண்டவில்லையா மனச்சாட்சி உனை கேடு செய்யாதே என?
வந்துபோகிற சாதாரனப்பிறவி நம்முடையது அன்பா !!
நமை நாமே அழித்துவிட ஏன் இவ்வளவு தீவிரம் உன்னிடம்?
அழித்தவரை போதும் இருப்பதை காக்க முயற்சி செய்யலாமே?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்ல எழாது நாக்கு !
சாமானியனுக்கு புரியுமா புறஊதாவும் அகஊதாவும்?
பதில்சொல்லும் நேரம் யோசியேன் மாற்று வழிகளை !
படைக்கப்புறப்படு நீ ஒரு பசுமை தவழும் அகிலத்தை !
ஆற்றவொனாத இயற்கையின் காயங்கள் ஆறட்டுமே நண்பா !!