விவசாயம்

வானம் பாத்த மழை
கானல் நீராய் போகும்போது
வானம் பாத்த பூமி விளைச்சல்
அடுக்களையில் பூனைகள்
பள்ளி கொள்வதில் முடிகிறது

நாற்று விற்ற காசும்
கைக்கு வந்து சேரவில்லை
வாங்கிய கடனுக்கான
வட்டியும் இன்னும் கட்டவில்லை

சூரிய வெப்பத்தில் பொரிந்து
உடைந்து போன
வீட்டு மோட்டோலைகள்
மழைகாலம் வரு முன்னர்
வைரஸ் காய்ச்சலில் துவண்டது
களைந்து
புதிதாய் முனைய வேண்டும்

விளைந்த நாற்றுகள்
வரப்பை மூடினாலும்
எங்கள் வயிற்றுப் பாடுகள்
தரகனின் கருணைக்கு
மனு போட்டு காவல் இருக்கும்

ஆண்டவர் மாண்டார்
மாண்டவர் ஆண்டார்
யாருமே எம்சோகம் தீண்டார்

கால காலங்களாய்
நெல்மணிகள்
வெள்ளாமை செய்த வயலில்
தண்ணீர் இல்லாமல்
கண்ணீர் வெள்ளாமை செய்கிறோம்

மும்போகம் போயி
ஒருபோகம் செய்யவே
இப்போது
பெரும்சோகம் காணுகிறோம்

காரோட்டும் சினிமா காரனுக்கு
கஷ்டம் வந்தா ஓடுகின்ற பொது ஜனம்
ஏரோட்டும் எங்களை
சேறாட்டம் பார்ப்பதென்ன

வலிகளில் விடும் கண்ணீரில்
விழிகளில் பார்வை மங்கி
மறுபடியும் தலை நோக்கும்
வானத்தை நோக்கி
விடியலைத் தேடி

எழுதியவர் : சுசீந்திரன் (28-Aug-13, 12:23 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : vivasaayam
பார்வை : 55

மேலே