அதிகாலை நடைவழியில் .....!!

வீதி வழியெங்கும்
விருட்சத் தோரணங்கள்
குடை விரிக்கும் !

நாசி நுகர தூயவளி
சுவாசப் பை நிறைக்கும் !

நாடி நரம்பெங்கும்
புத்துணர்ச்சி பிறக்கும் !

ஆசி வழங்குமாற் போல்
மரமல்லி பூச்சொரியும் !

கிளை தெளிக்கும் பன்னீராய்
பனித்துளி வரவேற்கும் !

தவழ்ந்து வரும் தென்றலும்
சுகமாய் மேனி வருடும் !

கூவி புள்ளினமும்
பரவச ஒலி எழுப்பும் !

கீழ்வானில் செங்கதிரும்
பைய தலை தூக்கும் !

மலரும் அரும்பின் ஒலி
காதோரம் முத்தமிடும் !

புலரும் பொழுதின் ஒளி
பதமாய் இதமளிக்கும் !

தினம் காணும் காட்சியெனினும்
மனம் விழையும் தினம் காணவே !

அதிகாலை நாளும்
காலார நடை பயின்றால்...
அலுப்பெல்லாம் பறந்தோடும்
நோய்நொடியும் தொலைந்தோடும் ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Aug-13, 10:16 pm)
பார்வை : 117

மேலே