ஆத்தா ...!!!

அதுக்கு பால் கொடுத்திட்டீயா...? என்ற சத்தம் அடுக்கலையிருந்து கேட்டது ராதிகாவுக்கு...

இல்லை அத்தை ஆத்தாவுக்கு இன்னும் பால் கொடுக்கலை... நான் கோயிலுக்கு வேற போகனும்... பால் கொடுத்துவிட்டு இறைவனுக்கு விளக்கேற்ற சென்றுவிட்டாள்...

ஆத்தா பக்கவாதம் வந்து 5வருடமாக படுத்த படுக்கையாக கிடக்கிறதே... எப்போது இறைவனடி சேரும் என்று பலரும் சொன்னவிதமாகவும் பார்க்கும் விதமாகவும் தினமும் அவள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி..சிலர் ராதிகாவிடம் தேவாரம் பாடு சீக்கிரம் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூறுவர்.. அவளும் நிறைய தடவை பாடி விட்டாள்... நடந்த பாடில்லை...

ராதிகாவின் கணவர் ஆத்தா என்றால் உயிர்... அம்மா அப்பாவை விட அவளிடம் தான் அன்பாக இருப்பார்... ஆத்தா என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வார்... ஆத்தாவின் மகன்கள் கூட இவ்வளவு பாசமாக இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு பாசமாகவும் பணிவாகவும் நடந்து கொள்வார்...

அத்தை ஆத்தா திடீரென்று இறந்தால் அவரிடம் எப்படி அத்தை சொல்வது? அவரோ வேற மாநிலத்தில் வேலை பார்க்கிறார்... ஆத்தா இறந்த சேதியை சொன்னால் அவர் மனது தாங்குமா என்று அடிக்கடி அத்தையிடம் ராதிகா புலம்புவாள்...

அத்தையும் பைத்தியகாரி... அவன் என்ன சின்ன பயனா... மன தைரியம் அவனுக்கு இருக்கு என்று ராதிகாவிற்கு ஆறுதல் சொன்னாலும் அவளுக்கும் இதே கவலை தான்...

வார இறுதியில் ஆத்தாவை பார்க்க ராதிகாவின் கணவன் வந்தான். ஆத்தா அருகிலே இருந்தான்... குளித்து முடித்துவிட்டு ஆத்தாவிற்கு பால் கொடு என்று அத்தை அவரிடம் சொன்னாள்... அவனும் குளித்து முடித்து விட்டு ஆத்தாவுக்கு பால் கொடுக்க சென்றான்...

என்ன பால் குடிக்காமா கீழே கொட்டுது...

ராதிகா ராதிகா.. என்று கூப்பிட்டான்...

என்னங்க இதோ வருகிறேன்...

என்னங்க... என்ன வேணும்...

ஆத்தா பாலை குடிக்க மாட்டேங்குது... நீயே கொடுத்திடேன் என்று செல்லமாக சொன்னார்...

அவளும் பாலை கொடுக்கும் போது ஆத்தா குடித்தது...

பரவாயில்லையே பேரன் கொடுக்கும் போது குடிக்காமல் பேத்தி கொடுத்ததும் குடித்துவிட்டதே என்று மனைவியிடம் அவர் சொல்லிக் கொள்ளும் ஆத்தாவும் அழகாக அவர்களை பார்த்து சிரித்தது.

எங்க கிளம்பிட்ட...

கோயிலுக்கு தாங்க...

சரி இரு நானும் வாரேன்... உன்னை கோயில விட்டுறேன்...

இல்லங்க பரவாயில்லை... காலையில தானே வந்தீங்க... கொஞ்சம் ஓய்வு எடுங்க... நான் போய் கொள்கிறேன்

இல்லம்மா வருகிறேன்.. கொஞ்சம் பொறு... பைக் சாவியை எடுத்துக் கொண்டு அத்தையிடம் சொல்லி விட்டு இருவரும் கோயிலுக்கு கிளம்பினர்...

போகும் வழியில் ஏங்க அம்மா வீட்டுக்கு போவாமா... அப்பா இருந்தால் அவர்களை கோயிலுக்கு கூட்டி செல்லலாம்...

சரிடி... என்று ராதிகா அம்மா வீட்டுக்கு வண்டியை ஓட்டினான்...

அத்தை மாமா எப்படி இருக்கீங்க... காலையில தான் வந்தேன்... இவ கோயிலுக்கு போகனுன் சொன்னாள். அதான் கூட்டிட்டு வந்தேன்...

சரிங்க மாப்பிள... கோயிலுக்கு நான் கூட்டிட்டு போறேன்... நீங்க வீட்டுக்கு போய் ஓய்வெடுங்க என்று அப்பா கூறினார்...

அவரும் பைக்கிள் கிளம்பிவிட்டார்...

அப்பாவும் மகளும் கோயிலுக்கு கிளம்பினர்..

கோயிலுக்கு சென்று எல்லா தெய்வத்தையும் வணங்கிய பின்பு இறைவனுக்கு நெய் விளக்கு ஏற்றவதற்காக ஆய்தம் ஆனாள்..

விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு மஞ்சள் குங்குமம் வைத்து விளக்கு ஏற்றும் போது செல்போனில் மணி ஒலித்தது...

என்னப்பா இந்த நேரத்தில் யார் என்று முகத்தை பார்த்தாள்...

பரவாயில்லையம்மா முதலில் விளக்கேற்று அப்புறம் யார் என்று பேசுவோம் என்று கூறவும் அவளும் விளக்கேற்றினாள்...

விளக்கேற்றிய பின்பு கோயிலை விட்டு வெளியேறும் போது யாருப்பா போன் பண்ணியது என்று போனை வாங்கி பார்த்தாள்...

பார்த்தால் அவர் கணவர் தான் போன் பண்ணியிருக்கிறார்...

எதுக்கு அவர் போன் பண்ணியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டே அவருக்கு போன் அடித்தாள்... அவர் நம்பர் பிஸியாகவே இருந்தது..,.

சரிம்மா வா வீட்டுக்கு போவோம்... அப்புறம் பேசுவோம் என்று அப்பா கூறியதும் அவரிடமிருந்து போன் வந்தது...

ராதிகா ராதிகா....

என்னங்க...

என்னங்க... உங்க குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு...

ஆத்தா இறைவனடி சேர்ந்திருச்சு... ராதிகா...

என்னங்க சொல்றீங்க...

இருங்க நான் உடனே வறேன்... என்று போனை கட் செய்துவிட்டு அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்றாள்...

அவர் அழவில்லை...கதறவில்லை...அவர் தான் இறந்ததை முதலில் பார்த்தார்... தைரியமாக அனைவரிடம் இந்த சேதியை போனில் கூறிக்கொண்டிருந்தார்...

வீட்டில் துக்க நிகழ்வு நடந்தாலும் அவரை நினைத்து மனதில் சந்தோஷப்பட்டாள் ராதிகா ...

நன்றி ;ரதிதேவி (நிலாமுற்றம் )

எழுதியவர் : கே இனியவன் (31-Aug-13, 3:45 pm)
பார்வை : 183

மேலே