விவசாயப் பாட்டு-கே.எஸ்.கலை
===தலைவாரி தளிர்ச்சூடிய மலைநாடு -
தரணியிலே உயரமாம் அறிவார் எவரும்!
===நிலைமாறிப் போனாலும் கலைநாடு -
இரணியத்தை விஞ்சியே மதிப்பில் கவரும்!
===விலைமாரிப் பொழிகின்ற களைநாடு -
அரணியத்தில் மலருமாம் கனியும் மலரும்!
===மழைமாரி இழந்தாலும் விளைநாடு -
பரணியிலே துயரமாம் அறியார் பலரும் !
===நாடுயர மலையேறித் தளிரைக்கிள்ளி -
நாள்தோறும் கிடப்பதோ குறிஞ்சி முகட்டில் !
===வீடுயர விளக்கேற்ற உயிரைக்கிள்ளி -
உழைத்தாலும் கிடையாதே ஒளியும் வீட்டில் !
===கேடுயர வாய்நிறைய வார்தையள்ளி -
வீசினாலும் வாழ்கின்றார் வெற்றுப் பகட்டில் !
===பாடுயர பாடுபட்டே கூனினைத்தள்ளி -
விளைத்தாலும் நம்வீடோ என்றும் கொட்டில் !
===முலைப்பால் நனைக்காத சிசுநாவும் -
முளையிலே வரண்டுக் கருகும் நிலவரம் !
===விலைப்பால் எட்டாத அம்மாவும் -
சீலையிலே இறந்து தொங்கும் கலவரம் !
===உழைப்பால் செழிக்காத அப்பாவும் -
சிலையிலே கெஞ்சி நிற்பான் இறைவரம் !
===அக்கறையால் உதவிடாத துர்நாவும்
வேளையிலே வந்து கேட்பான் ஓட்டுவரம் !
===உழுகின்ற உழவனுக்கு உணவில்லை -
உண்டிக்காய் கண்டிராத சோகம் கண்டான் !
===அழுகின்ற குழந்தைக்குப் பாலில்லை -
வெற்றுமடி தினம்சப்பி ரோகம் கொண்டான் !
===தொழுகின்ற கடவுளுக்கு விழியில்லை -
படையலுண்டு அவனோ போகம் கண்டான் !
===எழுகின்ற விம்மலுக்கு முடிவில்லை -
கூற்றனுக்கே விவசாயி யாகம் செய்தான் !