நினைத்தது நடந்தது ....! (குட்டிக் கதை )
முகிலனுக்கு தூக்கம் பிடிக்கவில்லை .
லடாக்கின் உறைய வைக்கும் பனி கூட தகித்தது. மிலிட்டரி ஆஃபீஸரிடம் இரண்டு வாரம் லீவ் கேட்டிருந்தான் .
"தலை தீபாவளிக்கு சுகுணாவுக்கு கிளி பச்சை
கலர்ல மெரூன் பார்டர் போட்ட பட்டுச் சேலை
எடுத்து குடுக்கணும் .அவ செவத்த உடம்புக்கு
பளிச்சுன்னு எடுப்பா இருக்கும் ! "
அவன் ஆசைக்கு ஒரு பிரேக் போட்டார் சீனியர்
ஆபீசர் .
" முகிலன் ! நீங்க அடுத்த மாசம் வேணா லீவ் எடுத்துக்குங்க ...!! இப்ப ஆள் தேவை படுது ...!
ஐ ஆம் சாரி ...! இந்த தடவை லீவ் சாங்க்ஷன் பண்ண முடியாது ....! "
தாய் மண்ணைக் காக்கும் பொறுப்பை பெருமையாய் கருதும் முகிலன் இன்று சோர்ந்து விட்டான்.
தீபாவளி அன்று சாப்பிடக் கூட பிடிக்க வில்லை முகிலனுக்கு ! நினைவெல்லாம் கிராமத்தில் இருக்கும் புது மனைவி சுகுணாவையே சுற்றிச் சுற்றி வந்தது .
விழியோரம் கசிந்த கண்ணீர் உறைந்து காய்ந்து போக தன்னை மறந்து தூங்கி விட்டான் .
விடிந்து மணி பத்தாகி விட்டது. மொபைல் ஒலித்தது .சுகுணாவிடம் இருந்து கால் ...!
"மாமா ! எப்படி இருக்கீங்க ? நான் இன்னைக்கு
நோன்புக்காக எல்லை காளியம்மன் கோயிலுக்கு
சாமி கும்பிட வந்தேன் . கோயில் பூசாரி அம்மனுக்கு சாத்தின பட்டுப் புடவைய எனக்கு கொடுத்தார் மாமா ! ரொம்ப அழகா இருக்கு !
கிளிபச்ச கலர்ல மேரூன் பார்டர் ....! நீங்க எப்ப மாமா வருவீங்க ?"
கேட்டுக் கொண்டே இருந்த முகிலன் கண்கள் குளமாயின. மற்றது எதுவும் அவன் காதில் விழவில்லை .
"நாட்டு எல்லையக் காக்கும் பணியில் இருக்கும் என் மனச புரிஞ்ச எங்க ஊர் எல்லை காளியம்மா
என் ஆசையா நிறைவேத்திட்டாளே.....! "
கண்ணீரைத் துடைத்து விட்டு சுறுசுறுப்பாய்
பணிக்குத் தயாரானான் .