நான் அவனில்லை

திரு. முருகவேல் பூபதி பாஸ்கர தொண்டைமான். மனநல மருத்துவர். சராசரிக்கு கொஞ்சம் நீளமான பெயர்தான்.
"எப்போ டாக்டர் வருவார்" என்ற என் சிறிய கேள்விக்கு மிகச்சிறிய "ம்" என்று பதிலளித்தார் வெள்ளை உடையில் பளிச்சென்றிருந்த மருத்துவரின் உதவியாளர். நேரம் ஆக ஆக சுவற்றிலிருக்கும் கடிகாரத்தின் "டிக் டிக்" ஒலி மிகவும் துல்லியமாகக் கேட்க ஆரம்பித்தது. எனக்கென்ன வியாதி? ஏன் என்னால் மட்டும் சக மனிதர்களைப்போல நிலைமைகளை ஒப்புக்கொண்டு வாழ முடியவில்லை? எதற்கெடுத்தாலும் ஏன் உணர்ச்சிவயப்படுகிறேன்? நல்ல வேளை. இந்த மருத்துவர் தொலைக்காட்சியில் இது நாள் வரை பிரசன்னமாகவில்லை. நான் இவரை சந்திக்க வந்ததிற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு என்பதை நீங்கள் மேற்கொண்டு என் கதையைப்படிக்கும் போது நிச்சயம் பு¡¢ந்து கொள்வீர்கள்.

"அகோரம்" என்று சப்தமாக என் பெயரை இரண்டிற்கு மூன்று தடவை அழைத்த உதவியாளர் " உள்ளே போங்க சார். என்னை கத்தவிடாதீங்க" என்று சலித்துக்கொண்டே தன் சட்டைப்பையிலிருக்கும் பயணச்சீட்டை மெலிதாகச்சுருட்டி காதை ரசனையுடன் குடைய ஆரம்பித்தார். கதவைத்திறந்து உள்ளே நுழைந்தேன். அவரின் பெயரின் நீளத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை.வழக்கமாக மருத்துவர்களிடம் காணும் விலை உயர்ந்த மூக்குக்கண்ணடி, அடுத்தவர் கண்களை ஊடுருவிப்பார்க்கும் விஷயங்கள் எதுவும் அவரிடம் இல்லை. மிகவும் ஒடிசலாக இருந்தார். அவரின் முகத்திற்குத் துளியும் பொருந்தாத குறுந்தாடி வைத்திருந்தார். எனக்கான இருக்கையைக் காட்டி செய்கையால் உட்காரச்சொன்னார்.

"சரி, இப்போது சொல்லுங்கள் மிஸ்டர். அகோரம்" என்று தன் ஆள் காட்டி விரலிற்கும் நடு விரலிற்கும் இடையே சொருகிய பென்சிலால் சீரான இடைவெளியுடன் மேஜையில் தட்டிக்கொண்டே இருந்தார். அந்த ஒலி மட்டும் அறை முழுவதும் எதிரொலித்தது.
"டாக்டர், நான் நார்மலாக இல்லை என்று எனக்கே தெரிகிறது. மற்றவர்களைப்போல இயல்பாக என்னால் எதையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. கோபம்தான் அதிகம் வருகிறது. உங்களிடம் கூறினால் சிரிப்பீர்கள் டாக்டர். தொலைக்காட்சி விளம்பரத்தில் காட்டும் எந்தப்பொருளையும் நான் வாங்கவே மாட்டேன்" என்று கூறியவுடன் என்னையே வினோதமாக உற்றுப்பார்த்தார். நான் மறுபடியும் தொடர்ந்தேன். "ஒரு சராசரி மனிதனுக்குரிய அடிப்படைக்குணங்கள், பலகீனங்கள் எதுவும் என்னிடம் இல்லையே என்று எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. நான் நன்றாக தூங்கியே பல மாதங்கள் ஆகிவிட்டது. தொலைக்காட்சியில் வரும் அரை மணி நேர குடும்ப நாடகங்களில் குறைந்தது ஐந்து நிமிஷங்களாவது என் வீட்டில் உள்ளவர்கள் பிழியப்பிழிய அழும்போது என்னால் மட்டும் அவர்களுடன் ஈடு கொடுத்து சோகத்தை வெளிக்காட்டவோ, மனம் விட்டு அழவோ முடிவதில்லை. ஒளிபரப்பாகும் எந்த செய்திகளையும் என்னால் முழுவதும் நம்ப முடியவில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்களின் குப்பை விஷயங்களை என் மனதில் என் அனுமதி இல்லாமல் அவர்கள் திணிப்பதாகவே உணர்கிறேன்" என்று கோர்வை இல்லாமல் பேசினேன்.
"எவ்வளவோ எ•ப் எம் இருக்கிறதே. பாட்டு கேட்டால் உங்கள் மனது லேசாகுமே" என்று பரிந்துரைத்த மருத்துவரிடம் "ஒளிபரப்பாளர்களின் தமிழ் எனக்கு இது வரை பிடிபடவே இல்லை. அவர்களின் வேகமான தொடர் பேச்சு என் மனதைக் குழப்புகிறது.அவர்களின் மேல் கோபம்தான் வருகிறது" என்றேன்.
"வேறு ஏதாவது உங்களின் ஞாபகத்தில் வந்தால் கூறுங்கள். உங்களைக்குணப்படுத்த அது உதவும்" என்றார். மீண்டும் நான் தொடர்ந்தேன். "ஒரு நாள் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் பிஸ்ஸா ஜாய்ண்டிற்கு என்னை கூட்டிக்கொண்டு போனார்கள். எனக்குத்துளியும் அறிமுகம் இல்லாத உணவுப்பொருட்களை வெகு லாவகமாக ஆர்டர் செய்தார்கள். எதை முன்பு சாப்பிடவேண்டும், எதைப்பின்பு சாப்பிடவேண்டும், எப்படி இயல்பாக நடந்துகொள்ள வேண்டுமென்ற பொதுச்சுற்றறிக்கையை என் பத்து வயது மகன் வீட்டை விட்டு கிளம்பும் முன்பே அனைவரிடமும் தாக்கல் செய்திருந்தான். சாப்பிடும் போது முகம் சுளித்தால் அநாகரீகம் என்று என் மனைவி வேகமாக எதையோ உள்ளே தள்ளிக்கொண்டிருந்தாள். பிறகு பரஸ்பர உணவின் சுவை குறித்தான சிறிய கருத்தரங்கு. என் மகளோ உணவுப்பொருட் களின் விலை அப்படி ஒன்றும் அதிகமாக இல்லை என்ற துணை அறிக்கையுடன் ஆயிரத்து எண்ணூறுக்கான பில்லை எந்த விதமான பதட்டமும் இல்லாமல் என்னிடம் நீட்டினாள். அந்த கடைக்கு அதுதான் என் முதலும் கடைசி விஜயமாகிப்போனது. பிறகு எல்லா விடுமுறை நாட்களிலும் என் வீடு தேடி கடைக்காரர்களே வர ஆரம்பித்துவிட்டார்கள். வழக்கம் போல இது போன்ற உணவுத் திருவிழாவிலும் என்னை ஓரம் கட்டிவிட்டார்கள்" என்று நான் கூறியவுடன் கைகளில் வைத்திருந்த பென்சிலால் மிகவும் வேகமாக தட்டிக்கொண்டே என்னைப்பார்த்து சிரித்தார். நான் எதற்கும் லாயக்கற்றவன் என்று நூறு சதவிகிதம் உணர்ந்த மருத்துவர் தன் முகபாவத்தை மிகவும் இறுக்கமாக மாற்றிக்கொண்டு மிகவும் கவனத்துடன் சொற்களை தேர்ந்தெடுத்துப் பேசினார்.

"மிஸ்டர் அகோரம், உங்களைப் போல அதிகம் பேரை இங்கு நான் சந்திக்கிறேன்.ஒன்றை மட்டும் உங்களின் அடி மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நம்மை நாம் இயக்கவில்லை. வேறு யாரோதான் இயக்குகிறார்கள். அவர்கள் மிகவும் பலமானவர்கள். உங்கள் வீட்டின் கழிவறை வரை வருவதற்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டு. உங்களால் அவர்களை ஒன்றும் செய்து விட முடியாது. சுய விருப்பம், சுய தீர்மானம் என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிடுங்கள். எதையும் வேண்டும் வேண்டாம் என்று தீர்மானிக்க பழகாதீர்கள். உங்களுக்கான வாழ்க்கை, வழிமுறை எல்லாம் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. நீங்களும் மற்றவர்களைப்போல் வாழ்கிறீர்கள்.வாழவேண்டும். அவ்வளவுதான். சோ சிம்பிள். சில எளிமையான பயிற்சிகளை என் உதவியாளரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் நான்காம் தேதி என்னை வந்து பாருங்கள்" என்று தன் குறிப்பேட்டில் பதிவு செய்து கொண்டே "நெக்ஸ்ட்" என்று ஒலி வாங்கியில் அழைப்பு விடுத்தார்.

மருத்துவர் பரிந்துறைத்தபடி எல்லா பயிற்சிகளையும் மேற்கொண்டேன். என்னை இந்த வயதில் மாற்றிக்கொள்வதான முயற்சி மிகவும் கடினமாகத்தான் இருந்தது. ஒரு மாதத்திற்குள் ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பிவிட்டேன். தொலைக்காட்சி, வானொலிச்செய்திகளை முழுவதுமாக நம்ப முடிந்தது. இசை அலை வரிசை ஒளிபரப்பாளர்களின் தடுமாறும் தமில் பிடிக்க ஆரம்பித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தொலைக்காட்சியில் சீரியல் பார்க்கும் போது அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றெனக் கலந்து , குடும்பத்தினர்களுடன் சேர்ந்து மனம் விட்டு அழக் கற்றுக்கொண்டேன். கூடுதலாக ஒன்று. நானும் மற்றவர்களைப் போல பிஸ்ஸா ஜாய்ண்டில் பார்பிக்யு சிக்கன் ட்ரெஸ்டு பிஸ்ஸா, சீஸ் ஸ்டஃப்டு மட்டன் பர்கர், சாக்கோ லாவா என்று விலைகளை அலட்சியப்படுத்தி தொலை பேசியில் ஆர்டர் செய்யவும் கற்றுக்கொண்டேன்.சுறுங்கச் சொன்னால் நான் பரிபூரணமாக குணம் அடைந்துவிட்டதாக வீட்டில் உள்ள அனைவரும் நம்பினார்கள். நானும் நம்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : பிரேம பிரபா (1-Sep-13, 9:49 pm)
பார்வை : 217

மேலே