மானுடா இறுதியாக எச்சரிக்கிறேன் திருந்திவிடு ..!!!

வாயு தேவனின் விந்தையில்
கார்மேகங்கள் காதலுற்று
தழுவலில் முத்தாகி
மலர்ந்தேன் மழலை துளியாக ..!!!

ஆதவனின் அனலினில் கொதிப்புற்ற
நிலமகளை குளுமையூட்டும் அமிழ்தம்
வானிலிருந்து வருண தேவனாக
தவழ்ந்து தவழ்ந்து தரையிறங்கினேன் ..!!!

வளியினை வாங்கிய கரியமிலவாயு
ஓசோனில் ரசாயன தாக்குதலிட்டது
உக்கிரத்தில் சபிக்கிறாள் பூமித்தாய்
மானுடா இனி செயற்கை சுவாசமென்று ..!!!

இளைப்பாற இலையில்லை - பூலோகமே
கான்கிரேட் கூரையாகி கதிர்வீச்சு கம்பமானது
காட்டை தீயிட்டு மானையும் கருக்கிவிட்டு
மானுடா இயற்றுகிறாய் வனபாதுகாப்பு சட்டம் ..!!!

தரணியிலே துயிலிட தேக்கமில்லை
கழிவாய் சங்கமித்தேன் சாக்கடையில்
தேக்கிட குளங்களை வெட்டாமல்
மானுடா கடல்நீரை குடிநீராக்க திட்டமிடுகிறாய்.!!!

ஐம்பூதங்களை கொல்லுகிற கொடியவனே
புயல்,பேரலை,எரிமலை,தீப்பிழம்பு,மழையென
ருத்ர தாண்டவமிட்டு அழித்துவிடுவோம்
மானுடா இறுதியாக எச்சரிக்கிறேன் திருந்திவிடு.!!

இப்படிக்கு.
மழைத்துளி

எழுதியவர் : சுதா (4-Sep-13, 12:39 am)
சேர்த்தது : சுதா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 354

மேலே