வெறும்பேச்சு மட்டுந்தானா......?

“கருவறையில் பத்து மாதம். இதயவறையில் இன்று வரையும் என்னை சுமப்பவள். தந்தை முகம் நான் கண்டதில்லை. ஆனால் அந்தக்குறையை நான் உணர்ந்ததில்லை. கூலி வேலை செய்து என்னை வளர்த்தாள். விறகு வெட்டினாள். வெயிலில் வெந்தாள். என் உடைகளுக்கு மட்டுமல்ல, ஊரார் உடைகளுக்கும் சலவை இயந்திரமானாள். என் வீட்டு அடுப்பங்கரையில் அவள் உடல் கருகிய நேரத்தை விட பிறர் வீட்டு அடுப்படியிலேயே நீண்ட நேரம் கருகியது. தன்னை உருக்கி என்னை உருவாக்கினாள்.

தான் உண்ணாவிட்டாலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் தாய்மார்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் என் அன்னை அப்படியல்ல. முதலில் அவள்தான் ஒரு பிடி உணவை உண்பாள். அதன் பின்பு தான் எனக்குத் தருவாள். என்ன வியப்பாக இருக்கிறதா? அந்தச் சாப்பாடு உருசியாக இருக்கின்றதா? என்னுடம்பிற்கு ஏற்றதா என பரிசோதிக்கவே அவள் அப்படி செய்வாள். பரீட்சைக்கு நான் கண்விழித்து படிக்கும்போது அவள் கண்ணயர்ந்து தூங்குவாள். அப்போதுதானே மறுநாள் கோயிலில் அவள் நேர்த்திக்கடனை சிறப்பாக செய்துமுடிக்கலாம். நான் உழைக்க ஆரம்பித்தபோது என்னோடு வெளியில் வரும்போதெல்லாம் கிழிசல் இல்லாத புடவையை தேடி எடுத்து அணிந்துகொள்வாள். போலிக்கௌரவத்திற்காக அல்ல. இவன் தாயை கவனிப்பதில்லையென தன் மகனை யாரும் குறைவாக எடைபோட்டு விடக்கூடாது என்பதற்காக.

இன்று உங்கள் முன்னிலையில் இந்த மேடையில் ஒரு தொழிலதிபராக நான் ஒலிவாங்கி முன் பேசிக்கொண்டிருக்கின்றேன் என்றால் அதற்கு என் தாய்தான் காரணம். எத்தனை பேர் தன் தாயைப் பற்றி உணர்ந்துள்ளனர்? என் வாழ்க்கையில் நான் முதலில் சொன்ன வார்த்தையும் அம்மா தான். என் மூச்சடுங்கும்போது சொல்லப்போகும் வார்த்தையும் அம்மா தான்.

அன்னையர் தினத்தில் முதியோர் இல்லத்தில் உரையாற்றுவதற்காக என்னை அழைத்தமைக்கு அனைவருக்கும் நன்றி பாராட்டி என் முன் அமர்ந்திருக்கும் அன்னையர்கள் அனைவரையும் வணங்கி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்!” முதியோர் கூட்டத்திலிருந்து கரகோஷம் எழுகின்றது. அக்கூட்டத்திலிருந்தே இவனுடைய தாயும் கண்ணீருடன் கைதட்டுகின்றாள் என்பது அவனுக்கும் அந்த அன்னைக்கும் மட்டுந்தான் தெரியும்!

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (5-Sep-13, 9:25 pm)
பார்வை : 156

மேலே