@@@ முதல் முத்தம் @@@

ஆசைகள் பொங்கிவர
ஆழ்மனத்தில் மகிழ்ச்சிவர
கண்களில் கண்ணீர் வர
சொல்லற்க்கரிய உணர்வில்
பிறந்த குழந்தைக்கு தாயின் முத்தம்!!!

ஒருகணம் தன்னிலை மறக்க
வார்த்தைகள் ஊமையாக
உள்ளுக்குள் புதுசக்தி பிறக்க
உணர்வுகள் கொந்தளிக்க
கையில் தவழ தந்தையின் முத்தம்!!!

ஓடிவந்து உணர்ச்சிப்பொங்க
மழலையின் மகிழ்ச்சியில்
பிஞ்சு குழந்தையின் எச்சில்சிந்த
சட்டென்று தித்திப்பாய் தந்திடும்
தந்தைக்கும் தாய்க்கும் ஓர் முத்தம்!!!

அன்பில் அடிப்பதற்கும் அணைப்பதற்கும்
அவ்வபோது கோவமும் பாசமுமாய்
மேலான அன்பிலும் ஆசையிலும்
அலுக்காமல் வந்திடும் அழகாய்
அன்பு உடன்பிறப்புக்களின் முத்தம்!!!

அலாதியான மகிழ்ச்சியிலும்
அமைதியான சோகத்திலும்
கட்டியணைத்து கண்ணீர்மல்க
நானிருக்கிறேனென பார்வைபேச
பாசத்தால் நட்பின் முத்தம்!!!

உயிரும் நீயே உடலும் நீயேயென
உள் நரம்புகளும் முறுக்கேற
ரத்தநாளங்களும் புத்துணர்ச்சிப்பெற
உணர்வுகளின் உச்சமாய்
உதட்டில் விழும் காதலின் முத்தம்!!!

வாழ்வின் துணையாய் வந்திருக்க
நித்தமும் நினைவென நிறைந்திருக்க
காதலும் காமமும் கலந்திருக்க
கட்டியவளுக்கேயென கண்மூட
கட்டிய காதல் கணவனின் முத்தம்!!!

முத்தங்கள் சத்தமில்லாமல்
சித்தம் சிலிர்த்து கத்தும் அன்பில்
தித்திக்க தெவிட்டாமல் பத்தும்
பலநூறுமாய் இருந்தாலும்
முதல்முத்தம் இனித்திடும் நித்தம்!!!

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (8-Sep-13, 3:04 pm)
பார்வை : 152

மேலே