பம்மாத்து சுதந்திரத்தில் நல்லாக நித்திரை கொள்

பம்மாத்து சுதந்திரத்தில் நல்லாக நித்திரை கொள்

எத்தனை முறை எவரெல்லாம் வருகிறார்கள்
புண்ணான மேனிக்கு பூப்போடும் கூத்தை
இஞ்ஞாலம் இன்று ஈழத்தில் பெற்றிருக்கு
தமிழர்களுக்கு மட்டுமே வந்து கூடும்
பேய்களுக்கும் புன்னகைக்கும் பண்பாடு
சிதறிப்போன வாழ்வை மறந்து
சாவை மட்டும் பாடிய படிக்கு
சாமகானம் பாட மறந்து விட்டோம்
எவர் எழுதித் தருவார் எமக்கான நீதியை
பற்றியெரிகிறது நெஞ்சத்துத் தீ
கூரை புடுங்கியவனின் குடலெடுத்து வேலியில் கொளுவ
வேலையேதும் பார்
சொறி நாய்களின் சங்கீதக் கச்சேரியை
காரம் சுண்டல் தின்றபடி கை தட்டி ரசிக்காதே
மானம் கெட்ட வாழ்வடா தமிழா
சுயலாபாம் கருதி ஈழத்தின் சுருதி மீட்டும்
அவமான அரசியாலாளர்களுக்கு
புரியும் படி ஏதேனும் விளக்கு .
அவரவர் நாட்டிலேயே அம்மணங்களோடு
அலைபவர்கள்
கோவணங்களை எப்படி எமக்கு உடுத்துவர்
தெளிவாகும் வரை நீயும் விளங்கு .
பழிதீர்க்கும் படலத்தில் எம்மை பாடையேற்றி
கக்கூசு கட்டி தருபவர் முகத்தில் உமிழ்
உலகமுழுதும் அகதியெனும் அவமானம்
பெற்றே சாகக் கடவதுவென
எம் தலைகளில் எழுதிய தரித்திரம் எவன் ?
இரணைமடு இழிச்ச வாய் அல்ல
வானமேறிய வரிகள் உலவிய காடு
என்று சாதனைவாதம் மட்டும் பேசாதே
தமிழா
முறிகண்டி பிள்ளையானிடம் கேள்
விடுதலை வேண்டுமெனில் உன்னைப் போராடச் சொல்லுவான் .
கடவுளால் போராட முடியாது
சும்மா இருக்கும் புத்தனே வெல்லும் சும்மா கடவுள்கள்
நன்றாக விளங்கிக் கொள்ள
நவநீதம் பிள்ளை நாடு தரமாட்டார்.
கனவுகளை கலைத்து பாய் விட்டு எழும்பு
நாடற்ற உனக்கு வீடும் நிரந்தரமில்லை
உன் வீட்டின் முன் ஒழுங்கையில் தான்
அவர்கள் நித்திரையற்று காவல் காத்தனர்
உனது கனவுகளை.
நல்லாக யோசி நாடு நம்முடையது.

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (8-Sep-13, 4:10 pm)
பார்வை : 82

மேலே