ஏன் சிரித்தாய் இளந்தளிரே !

பெண் இனத்துப் பேரழகே !
பெயர் விளங்க வந்தவளே!

கண்ணயர்ந்து தூங்கயிலே
கனியிதழை மெல்லசைத்து

புன்முறுவல் செய்தனையே
புரியவில்லை எந்தனுக்கு!

கண்ணின் மணி ஒளியே
கற்கண்டின் இன்சுவையே

மண்ணில் வந்து பிறந்ததற்கு
மகிழ்ச்சி கொண்டு சிரித்தனையோ ?

தாய்ப்பாலைத் தரமறுத்து
தாரகையே உன்றனுக்கு

கள்ளிப்பால் கொடுத்தழிக்கும்
கயமை கண்டு சிரித்தனையோ ?

சீர் செனத்தி செய்வதற்கு
சிரமப்படும் பெற்றோரை

உன்மனதில் தினம் நினைத்து
உறக்கமின்றி சிரித்தனையோ ?

படிக்க வைக்கப் பணமின்றி
பாதியிலே நிப்பாட்டி

மணம்முடிக்கும் பெற்றோர் மேல்
சினங்கொண்டு சிரித்தனையோ ?

படிக்கும் வயதினிலே
படிப்பை மட்டும் வழியுறுத்தி

ஒழுக்கம் உயர் பண்பை
ஊட்டாத பெற்றோரை

திட்ட வழி தோன்றாமல்
திகைத்துச் சிரித்தனையோ ?

கல்வி கற்கும் வயதினிலே
காதலினால் கருத்திழந்து

பெற்றோரை விட்டோடும்
பெண் செயலால் சிரித்தனையோ ?

கல்லூரி சென்று மங்கே
கடமையை மறந்து விட்டு

ஊர்சுற்றும் சகோதரனை
உணர்ந்து சிரித்தனையோ ?

பிழைக்க வழிகாணாமல்
பெண் கொடுக்க யாருமின்றி

அப்பன் மற்றும் ஆத்தாளை
அடித்துப் பணம் பிடுங்கும்

பெற்ற மகன் செயல் கண்டு
பேதை நீ சிரித்தனையோ ?

மரபுக் கவிதைகளின்
மாண்பு தெரியாமல்

புதுக் கவிதை வரவால்
போற்றும் நிலை கண்டு

விரக்தி மனதில் வந்து
வெதும்பிச் சிரித்தனையோ ?

தமிழனாய்ப் பிறந்துவிட்டு
தாய்மொழியைக் கற்காமல்

அந்நிய மொழியாலே
அடிமைப் படும் வீணர் கண்டு

வெட்கித் தலை குனிந்து
வேதனையில் சிரித்தனையோ ?

நா.வேலுசாமி ஈரோடு--02

எழுதியவர் : நா.வேலுசாமி (9-Sep-13, 7:33 pm)
பார்வை : 110

மேலே