சிரித்திரபுரம் - 3

காட்சி - 4

மன்னர் மணி தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, அரசவையே மெளனமாக இருக்கிறது.

மணி: என்ன... மக்கள் தங்கள் வழக்குகளைக் கூறலாம் என்று நான் அறிவித்து பல நிமிடங்களாகியும் எல்லாரும் மெளனமாக இருக்கிறீர்களே, ஏன்? விசாரணைக்கென்று ஒரு வழக்கு கூடவா இல்லை?

பெரு: மன்னிக்க வேண்டும் அரசே! தாங்கள் வருடக் கணக்காக அரசவை கூட்டாமல் அந்தப்புரவாசியாக இருந்து விட்டதால் மக்கள் தங்கள் பிரச்னைகளை பஞ்சாயத்தின் மூலமே தீர்த்துக் கொண்டு விடுகின்றனர. ஆகவேதான்...


மணி: ஓஹோ.... இனி யாமே பஞ்சாயத்துத் தலைவர். பஞ்சாயத்துகள் எல்லாம் அரண்மனையில்தான் நடக்க வேண்டும் என்று உடனே உத்தரவிடும். நமது அரசவை நர்த்தகி பெருஉண்டி இனியாளை உடனே வரவழையும். நாட்டியம் பார்த்து பொழுதைக் கழிக்கலாம்.

அரசவை நர்த்தகி பெருஉண்டி இனியாள் வரவும் மன்னன் மணி அதிர்ச்சியடைகிறான்.

மணி: இதென்ன... அரசவை நர்த்தகி இப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறாய்?

பெரு: சமீபத்தில் நோய் கண்டதன் விளைவும், பஞ்சத்தின் விளைவும் ஒருசேரத் தாக்கியதால்தான் மன்னா...

மணி: பலத்த காற்றடித்தால் பறந்து விடுவாள் போலிருக்கிறாள். முதலில் பெருஉண்டி இனியாள் என்ற இவள் பெயரை சிற்றுண்டி இனியாள் என்று மாற்றிவிடும். இவள‌ை ஆடச் சொல்வது வீண்! உடனே ஓடச் சொல்லும்!

தெ.யானை: எனக்கு பரதம் தெரியும் மன்னா! நான் ஆடுகிறேன் தங்களுக்காக...

அவள் முன்னே வந்து அபிநயம் பிடித்து, ‘கிருஷ்ணா, நீ வேகமாய் வாராய்’ என்று எழும்பிக் குதிக்க, அரசவை நடுங்குகிறது. மணி பீதியுடன் அலறுகிறார்.

மணி: நிறுத்து யானை! நிறுத்து! யாம் புதிய மாளிகை கட்டிய பின்னர் நீ நடனமாடி இந்தக் கட்டிடத்தை இடிக்கலாம். இப்போது வேண்டாம். விட்டுவிடு அமைச்சர்களே, புறப்படுங்கள்... நாம் சென்று என் கனவு அரண்மனை எழுப்ப ஒரு நல்ல இடம் பார்த்து வருவோம்.

பெரு: அதற்கு இப்போதென்ன அவசரம் அரசே? இன்னும் பொருள் வந்து சேரவில்லையே...

மணி: யோவ், எனக்குப் பொழுதுபோக வேண்டாமா? உருப்படியாய் ஏதாவது செய்யலாமென்றால் விட மாட்டீரே...!

பெரு. நான் பட்டத்து யானையை தயார் செய்கிறேன் மன்னா...

மணி: ஏன், நான் குதிரையில் வந்தால் என்ன?

பெரு: அதிக வயதாகி விட்டது மன்னா....!

மணி: என்ன... எனக்கா அதிக வயதாகி விட்டது என்கிறீர்?

மணியின் முகத்தில் கொலைக்குறி உலவுவதைக் கண்டு பயந்து...

பெரு: குதிரைக்கு மன்னா! தவிர, இது‌போன்ற காரியங்களுக்குச் செல்லும்போது அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி வரலாம் அல்லவா? யானைதான் சரி.

மணி: அப்படி‌யானால் யானையிலேயே வருகிறேன். இந்த அமைச்சர் யானை வரவேண்டாம். மற்றவர்கள் எல்லாரும் என்னுடன் வாருங்கள்.

காட்சி - 5

மணி: அமைச்சரே! இந்தச் சிறு குன்றின் மேல் என் கனவு அரண்மனையை எழுப்பினால் நன்றாக இருக்குமில்லையா? இது எந்த ஊர்?

பெரு: செஞ்சிக்‌ கோட்டைக்கு அடுத்து இருபது காத தூரத்தில் இருக்கும் இதன் பெயர் வஞ்சிக்கோட்டை. இதுவும் நமது ஆளுமைக்குட்பட்ட இடம்தான் மன்னா. ஆனால் இங்கே கட்டுவதில் ஒரு சிக்கல்...!

மணி: அதுதானே... நீர் எப்போது நல்ல வார்த்தை பேசியிருக்கிறீர்? கூறும், என்னய்யா சிக்கல்?

பெரு: இங்கு மக்கள் அதிகம் வசிப்பதில்லை. காரணம் இங்கு குடிநீர்ப் பஞ்சம். ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதையும் அண்டை நாட்டு அரசன் அணைகட்டித் தடுத்து விட்டான். விளைவாக.... சில வற்றாத கிணறுகள் மட்டுமே நீர் தருகின்றன

மணி: ஆ...! குடிநீர் வரும் ஆறைக் கூட தடுக்குமளவுக்கு இதயமற்றுப் போய் விட்டானா அண்டை நாட்டான்? வேதனை! வேதனை!!

பெரு: ஆம் அரசே! மனங்கள் குறுகி வருகின்றன என்பது பெரும் வேதனைதான். இங்கே. நீங்கள் அரண்மனையை கட்டினால் மக்களை இங்கே வசிக்கச் சொல்ல வேண்டுமே.... எப்படி?

மணி: வேதனைகளை சாதனைகளாக மாற்றி விடுவான் இந்த மணி! குடிதண்ணீர்தானே பெரும் பிரச்னை? சரி... ஜனங்களை சமைப்பதற்கு மட்டும் கிணற்று நீரைப் பயன்படுத்தச் சொல்லலாம். குடிப்பதற்கு நீருக்குப் பதில் சாராயம் வழங்கி விடலாம். புதிய மாளிகை வந்தபின் குடிநீர் அல்ல... குடி சாராயம்தான் மக்களனைவருக்கும்! அதுவும் அரசாங்கம்தான் சாராய விற்பனை செய்யும். எப்பூடி!

‌பெரு: மன்னா... இதென்ன விபரீத யோசனை? அரசாங்கம் சாராயக் கடைகள் நடத்துவதா? சரித்திரத்தில் இதுவரை கண்டிராத யோசனையாகவல்லவா இருக்கிறது? படு கேவலமான யோசனையாகவும் இருக்கிறதே..! நீருக்குப் பதில் சாராயம் குடித்தால் மக்கள் கதி என்னாவது?

மணி: நிறையக் குடிக்கட்டும். விளைவாக குறைவாகச் சாப்பிடுவார்கள். உணவுப் பஞ்சம் தீரும். சாராய விற்பனையை அரசே நடத்துவதால் நமக்கும் கஜானா நிறையும். குடிசாராயம் சாப்பிடும் மக்கள் சீக்கிரத்தில் உயிரை விடுவதால் நாட்டில் ஜனத் தொகையும் குறையும். எப்படி எமது முக்கனித் திட்டம்?

பெரு: ஆஹா... அரசே, தங்களைப் போல மதி நிறைந்த மன்னரை சரித்திரம் கண்டதில்லை!

சற்றுத் தள்ளி நின்றிருக்கும் இளைய மந்திரி மார்த்தாண்டன் தலையிலடித்துக் கொள்கிறார்.

மணி: மார்த்தாண்டா! ஏனிப்படிச் செய்கிறாய்? உன் மனதிலிருப்பதை தயங்காமல் கூறு.

மார்த்: மன்னா...! நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் அண்டை நாட்டு எல்லைக்கருகில் இருக்கிறது. போர் என்று வந்தால் பாதுகாப்பது சிரமம்.

மணி: அண்டை நாட்டு மன்னனுடன் நட்புக் கொண்டுதானே பழகி வருகிறேன். அவன் எம் ஆருயிர் நண்பனாயிற்றே... அதுசரி,மார்த்தாண்ட வர்மரே, அவன் பெயர் என்ன?

மார்த்: (மீண்டும் தலையிலடித்துக் கொண்டு) அந்த அரசரின் பெயர் வீரகேசரி மன்னா!

மணி: பெயரைப் பார் பெயரை! கேசரி, ஜிலேபி என்றெல்லாம் வைத்துக் கொண்டிருககிறான்...! ஹா... ஹா... ஹா...

மணி பலமாகச் சிரிக்க, மற்றவர்கள் பேசாமலிருக்கிறார்கள். மணி சிரிப்பை நிறுத்தி முறைக்கவும், அனைவரும் சிரிக்கிறார்கள்.

மணி: தலைநகரை விட்டு நாம் கிளம்பி இரண்டு வாரங்களாகி விட்டன. அடுத்த ஆலோசனையை அங்கு சென்று வைத்துக் கொள்ளலாம். உடனே திரும்பலாம் நாம்.

மணி உத்தரவிட, அனைவரும் தலைநகர் நோக்கி பயணத்தை தொடர்கின்றனர்.

-நாமும் ‌தொடர்வோம்...

எழுதியவர் : (10-Sep-13, 10:49 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 114

சிறந்த நகைச்சுவைகள்

மேலே