சிரித்திரபுரம் - 4

காட்சி - 6

அந்தப்புரம். மஞ்சத்தில் ‘மணி’ சாய்ந்து படுத்திருக்க, அவனது கால் பிடித்துவிட்டுக் கொண்டிருககிறாள் புவனமுழுதுடையாள்.

புவன : அரசே! நம் மகன் சொல்லழகனுக்கு எப்போது பட்டம் சூட்டி மன்னனாக்கப் போகிறீர்கள்?

மணி : பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். யுத்தம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஓடுகிறான். கேட்டால் ‘யுத்தம் வந்தால் ரத்தம் ஆறாக ஓடுமே... பல உயிர்கள் போகுமே! இறைவன் படைத்ததை அழிக்க நாம் யார்? சமாதானமே சிறந்தது’ என்று தத்துவம் பேசுகிறான்....

புவன : (வியப்பாக) என்ன... இவ்வளவு தெளிவாகவா தத்துவம் பேசினானா என் மகன்!

மணி : கிழிந்தது போ! அவன் பேசியது மாதிரி நான் பேசிக்காட்டினால் ஒரு வழியாகி விடுவேனடி. நான் திருத்திச் சொன்னேன். அவன் வயதில் நான் எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்பட்டேன் தெரியுமா?

அப்போது அங்கே வருகிறாள் மணியின் இரண்டாவது அரசி வண்டார்குழலி.

குழலி : உங்கள் சுறுசுறுப்பின் லட்சணம் தெரியாதா? பட்டத்தரசி இருக்க, என்னை நீங்கள் திருமணம் செய்து கொண்டதும் அவன் வயதில்தான். அதைத் தவிர நிறையக் கன்னியருடன் கொட்டம் வேறு... உங்கள் தந்தை புலம்பியதையெல்லாம் மறந்து விட்டீர்களா? ஹும்!


புவனமுழு‌துடையாள் கொல்லென்று சிரிக்க, முறைக்கிறான் மணி.

மணி : அவ்வ்வ்வ்வ்! என் கனவு அரண்மனையைக் கட்டி முடிக்க நல்லதொரு ஆலோசனை தருவீர்கள் என்று பார்த்தால் என்னையே எள்ளி நகையாடுகிறீர்களே... நீங்களெல்லாம் என்ன மனைவிகள்?

அப்போது சொல்லழகு சுந்தரவர்மன் படுவேகமாக ஓடி வருகிறான்.

மணி : எப்போது பார்த்தாலும் ஓடிக் கொண்டேதான் இருப்பாயா மகனே?

சொ.சு.வர்மன் : அப்பா... அந்த ‌சொறியுடைய தம்பி... ச்சே, அறிவுடைய நம்பி நான்கு பானை நிறைய... ச்சே, நான்கு யானை சுமக்குமளவு பொன்னும், ரத்தினங்களும் கொண்டு வந்திருக்கிறான்.

மணி : ஆஹா... சொன்னதைச் சாதித்து விட்டானே அந்த இளைஞன்! அரசி, வா... உடன் சென்று அவனைப் பாராட்டுவோம். சொல்லழகா! நீ சென்று உன் தங்கையிடம் விவரத்தைக் கூறி அவளையும் அழைத்து வா.

சொ.சு.வர்மன் : அவள் தவிடு... ச்சே, செவிடு. நான் அவளுக்கு சொரியும்படி... ச்சே, புரியும்படி சொல்வதற்குள் போதும் போதுமென்றாகி விடுமேயப்பா...

மணி : அதுசரி... நீ பேசுகிற லட்சணத்தை அவள் புரிந்து கொள்வதற்கும் நேரமாகி விடும்தான். எப்படியோ... வந்து சேருங்கள். (போகிறான்)

காட்சி - 7

அரசவை. கட்டியக்காரன் மன்னரின் வருகையை அறிவிக்க கம்பீரமாக உள்ளே நுழைகிறான் மணி. இளைஞன் அறிவுடைய நம்பி எதிரில் வந்து நின்று வணங்குகிறான்.

அ.நம்பி : மன்னா! தங்களிடம் நான் சொன்னபடியே அண்டை நாடுகளுக்கெல்லாம் சென்று பெரும் பொருள் திரட்டித் திரும்பியுள்ளேன்...!

மணி : நன்று நம்பி, நன்று! உன் போன்ற மதியூகிகள்தான் நாட்டிற்கு இப்போது மிகத் தேவை. இன்று முதல் நீயே என் பிரதம அமைச்சர். அதுசரி... எப்படி இந்தச் செயலைச் சாதித்தாய்?

அ.நம்பி : மன்னா...! அதை சபையில் சொல்ல இயலாது. தங்கள் செவியைக் கொடுங்கள்...

மணி : (சந்தேகமாக) கடித்துக் கிடித்து வைத்து விடமாட்டாயே?

அ.நம்பி : கடிப்பதற்கு அதென்ன கமர்கட்டா? சந்தேகமின்றி அருகில் வாருங்கள் மன்னா...

சிம்மாசனத்தை விட்டு இறங்கி வரும் மணியின் காதில் அவன் கிசுகிசுக்க, சொத்தைக் கடலையை மென்றது போலாகிறது மணியின் முகம். கோபமாய் வாளை உருவுகிறான்.

மணி : அடேய் பாவி...! இப்படியா பொருள் சேர்த்தாய்? என் மானத்தை வாங்கி விட்டாயேடா...! என்னுடைய...

அ.நம்பி : (மெதுவான குரலில்) மன்னா! நான் சொன்னதை உரக்கச் சொன்னால் உங்களுக்குத்தான் கேவலம்!

மணி அடங்கிப் போய் சிம்மாசனத்தில் அமர்கிறான். அமைச்சர்கள் குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். மணி தலை நிமிர்ந்து, பெருமூச்சு விட்டு...

மணி : அமைச்சர்களே! பொருள் சேர்ந்து விட்டதால் உடன் அரண்மனையை எழுப்பியாக வேண்டும். செந்நிற பளிங்குக் கற்களால் எழுப்ப விரும்புகிறேன் நான். அவை எங்கே கிடைக்கும்?

அமைச்சர் பெருவழுதிச் சாத்தனார் எழுந்து உரத்த குரலில்...

பெரு : அரசே! ராஜபுதன தேசம் பளிங்குக் கற்களுக்குப் புகழ் பெற்றது. அங்கே ஜெயபுரி என்கிற ஊரில் நிறையப் பளிங்குக் கற்கள் கிடைக்கும். தாங்கள் உத்தரவிட்டால் நான் இக்கணமே புறப்படுகிறேன்.

மணி : நீர் ஏன் உடன் கிளம்பத் துடிக்கிறீர்? அங்கே சிவப்புக் கற்கள் கிடைப்பது உமக்கு எப்படித் தெரியும்?

பெரு : அது வந்து மன்னா.... அங்கே எனக்கு.... ஹி.... ஹி...

மணி : விளங்கிய மாதிரிதான்! அங்கும் ஒரு சின்ன மாளிகை ஏற்பாடு செய்து கொண்டு விட்டீரா? (மெதுவான குரலில்) நமக்கு வாய்த்த அமைச்சர்களும்கூட நம்மைப் போலவேயா அமைய வேண்டும்? ஹும்...! (உரத்த குரலில்) உடனே சென்று வாங்கியனுப்பும்! அறிவுடைய நம்பி, நீ எம்மை மூன்றாம் ஜாமத்தின் போது அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்! சபை கலையட்டும்! (போகிறான்)

-தொடரும்...

எழுதியவர் : (10-Sep-13, 10:51 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 82

மேலே