முண்டாசுக் கவிஞன்
முண்டாசுக் கவிஞனின்
முத்து தமிழுக்கு
முரசங்கள் அதிர்ந்தன
கூடவே
பரங்கியரின் தலைகளும்தான்
கரிசல் காட்டு நிலம் போல
காய்ந்து கிடந்த கவிதைப் பூங்கா
உன் வருகைக்குப் பிறகு
மான் உலாவும் சோலையாகியது
மானுடன் அலாவும் சாலையாகியது
எதுகையிலும் மோனையிலும்
சிக்கித்தவித்த சிக்கல் தமிழ்
உன்கவிக்குப் பின்னே
கன்னல் தமிழ் ஆனது
வயலில் நீரோடு
உன்பாட்டுகளையும் பாய்ச்சினார்கள்
பயிர்கள் செழித்து சிரித்தன
வரப்புகள் மறைந்தன
ஏற்றப் பாட்டுகள்
ஏற்றம் பெற்றதும்
கூத்துப் பாட்டுகள்
குலவை பெற்றதும்
உன் சாதனையே
பாரதி -
உன் பாட்டில் தீ
பறங்கியர் பொசுங்கினர்
பாரதி -
உன் பாட்டில் தேன்
படித்தவர் உருகினர்
பட்டினி தொட்ட போதும்
பாதை நீ மாறவில்லை
பத்தினி வெறுத்த போதும்
பாட்டை நீ மறுக்கவில்லை
இருந்து-
இறந்தும் கொடுத்தான் சீதக்காதி.
இல்லாமல்-
கடன் வாங்கிய அரிசியை
காக்கைக்கும் குருவிக்கும் கொடுத்தாய்
நீயே பெரிய சீதக்காதி.
அதுவரை -
அரண்மனை நந்தவனங்களை
அலங்கரித்த தமிழ்
மன்னனுக்கு மண்டியிடாமல்
மானத் தமிழானது
மன்னனைப் பாடாமல்
மற்றோரைப் பாடியதால்
நீயும் இளங்கோ -
நீதானே எம்கவிக்கெல்லாம் இளங்கோ .