பிரபஞ்சக் காதலன்...!

அக்னி குஞ்சுகளாய் அவனது கவிதைகளை எழுதி, எழுதி அவற்றை எல்லாம் பதத்துப் போன மனித மூளைகளுக்குள் திணித்துப் போட்டுச் சென்றான். நெருப்பின் சீற்றமாய் அது பற்றி எரியத்தான் செய்தது. அவன் பிரம்ம சொரூபமாயிருந்தான், ஆனால் லெளகீகம் அவனை பட்டினி போட்டது, லெளகீகம் அவனை அவமானப்படுத்தியது, சித்தம் கலங்கி தன்னை தானே உடலுக்குள் அடைத்துக் கொண்டு சுயநல நாடகங்கள் நடத்தி எப்போது தன்னலம் விரும்பும் சுயநல மனிதர்களுக்கு நடுவே அவன் பித்தனாகித்தான் போனான்....! ஆமாம் பாரதி வாழ்ந்த காலத்தில் பாரதியை விளங்கிக் கொண்டவர்கள் வெகு சிலரே....

தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்காக மட்டுமே வாழ முடியாமல் பாரதி தடுமாறிக் கிடந்த இரவுகள் ஏராளம்....! அதனால்தான் அவன் லெளகீக போராட்டங்களை உடலால் நின்று முன்னெடுக்காமல் எல்லாம் வல்ல பராசக்தியிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தினான்...! உப்புக்கும் புளிக்கும் என்னை அலைய வைக்கிறாயே.....என்று அந்த பெருஞ்சக்தியைச் சாடினான்.

இது என்னவோ வெற்றுப் புலம்பல் அல்ல....மேலோங்கிய நிலையில் இருந்த சக்தி சட்டென்று தான் இடம் மாறியது ஒரு மானுட உடல் அங்கே மயக்கத்தில் சிக்கிக் கொண்டு முழுமையாய் செயல்படுத்த முடியாமல் திணறியது. அதுதான் உண்மை.

அவனுக்கு பொருள் ஈட்டத் தெரியாமலில்லை, தெரியும். புலமை இல்லாமலில்லை, இருந்தது. ஆனால் அவனுக்கு இந்த வாழ்க்கையின் நெளிவு சுளிவுகள் எல்லாம் கால விரயமாய்ப் பட்டது. அவன் எங்கோ இருந்தான்...எதை எதையோ நிகழ்த்திக் காட்ட இயற்கையின் கூறுகளோடு கை கோர்த்துக் கொண்டு சீறிப் பாய முயன்று கொண்டிருந்தான் ஆனால் மிகையான குறைகள் அவனை இழுத்துப் பிடித்து கீழே இறக்கிக் கொண்டே இருந்தன.

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ என்று அவன் கேட்ட நல்லதோர் வீணை அவன் தான்....! சொல்லடி சிவசக்தி என்று அதட்டிக் கேட்டு பதில் பெற முயன்றான்....! வல்லமையை அவன் கேட்டது எல்லாம் அவனது குடும்ப நலனுக்காய் அல்ல....இந்த மாநிலம் பயனுறத்தான்.....என்று அவனது காலத்தில் இருந்தவர்களுக்குப் புரிபடவில்லை..

பாரதி எழுத்துக்களை வியாபாரமாக்கியிருந்தால் அந்த வியாபாரத்தோடும், பணத்தோடும் தன் குடும்பத்தாரோடு 80 வயதுகள் வரை வாழ்ந்து மரித்திருக்கக் கூடும் ஆனால்...சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பல விழிப்புணர்ச்சி விழுமியங்கள் இல்லாமல் மிகைப்பட்ட மானுடக்கூட்டம் விலங்குகளாய்த் தானிருந்திருக்கும் என்பதையும் அறிக. பாரதி ஒரு குடும்பத்துக்காய் பிறக்கவில்லை....இயற்கை அவனை இந்த சமூகத்துக்காய் இறக்கி வைத்தது அந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறு சறுக்கல்தான் அவனது இல்லறம்....

அவனின் கனவுகளும், சமுதாய விழிப்புணர்வு செய்திகளும் எவ்வளவு கம்பீரமானதோ அவ்வளவு கம்பீரமானது அவனது காதலும்....

சிரித்த ஒலியிலவள் கைவிலக்கியே
திருமித் தழுவி ''என்ன செய்தி சொல்'' என்றேன்;
''நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி'' என்றாள். ...

''நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்''.

ஆமாம் அவன் பிரபஞ்சக் காதலன்...என்றும் அழியாத புகழ் கொண்ட அமரனும் கூட...!

எழுதியவர் : Dheva.S (11-Sep-13, 5:08 pm)
பார்வை : 113

சிறந்த கட்டுரைகள்

மேலே