நாடக ஆசிரியர் ராது அவர்களுக்கு ......!!

நாடகமே உலகமாய் உலாவந்து
நாடகக் காற்றையே நுகர்ந்து
நாடகத்தை நாடாதவரைக் கூட
நாடகம்காண நாடிவரும்படி செய்து
நலிவுற்ற நாடக மேடைக்கு
நற் கதி கொடுத்து
நாடித்துடிப்பு அடங்கும் வரை
நாடக நினைப்புடனே வாழ்ந்தவரே !
ராது ஐயா ....!!

நின்பலமெது ? தன்னம்பிக்கையா ...? துணைவியா?
நிறைகுடமாய் விளங்கும் நண்பர்களா ?
நிகரில்லா ஒளிவீசும் மாணிக்கமாய்
நிறை குணம் கொண்டவரே ....!!

கொழுகொம்பின்றி தனித்தே போராடி
கொள்கையில் உறுதியாய் நின்றவரே !
இடையூறுவந்திடினும் தடுமாறா திடத்துடனே
இதுவும்கடந்து போகுமென கலங்காதிருந்தவரே!

எளிமைவிரும்பியே ! பண்பின் சிகரமே !
என்னே உந்தன் தனித்தன்மை ?
ஒளிந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்வதில்
உம்மை மிஞ்ச யாருளர் ?

ஏணியாய் பிறரை ஏற்றிவிட்டு
கீழிருந்து அழகு பார்த்தவரே ! -கலை
வாணியே பூரிப்பாள் - தன்
தவப் புதல்வன் ராதுவென .....!!

புதுமையைப் பாராட்டி
தகுதிக்கு தலை வணங்கி
கலைஞர்களைக் கௌரவித்தாய் ....!
புகழாரத்தோடு மேடையேற்றி
கிரீடம் சூட்டி
விருதுகொடுத்து
வியக்க வைத்தாய் ...!!

கலைமாமணியே ...! -உம்
கலைத்தாகம் தீர்ந்ததோ ....?
கலை வாரிசாய்
பிரியமகள் நின் பணிதனை
கம்பீரமாய் வழிநடத்த - அக்
கண்கொள்ளாக் காட்சிதனை
கண்டு மனம் மகிழ்கிறோம் ...!
கண்ணீருடன் உம்மையே
கனத்த இதயத்துடன்
நினைவு கூர்கிறோம் .....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Sep-13, 3:30 pm)
பார்வை : 90

மேலே