சாந்தா டீச்சர்....

எங்கேனும்....

சிறு வகுப்புப் பள்ளிகளைக்
கடந்து செல்ல நேர்கையில்...

நினைவிற்கு வந்து விடுகிறது
சாந்தா டீச்சரின் ஞாபகங்கள்.

இமை பிரிய...
நீண்ட குரல்களுடன்
அரைக்கால் சட்டைகளோடு
நாங்கள் சொன்ன..."வணக்கம் டீச்சர்"-
இப்போதும்...
நிறம் மாறாமல்....
புன்முறுவலாய் உறங்கிக் கொண்டிருக்கிறது..
எனக்குள்.

விளையாடல்களும்...தேடல்களும்...
நிரம்பிய என் வயதின் கை பிடித்து...
"அ"கரம் சொல்லித் தந்த முகம்...
நினைவு மீறி எழும்புகிறது இப்போதும்.

உயிர் நிரம்பிய "கல்"லாய்
நான் வளர்ந்து கொண்டிருக்க...
வலிக்காமல்...
என்னைச் செதுக்கிய விரல்களை...
நான் ஒருபோதும்...
மறப்பதற்கே இல்லை.

இருள் சிதைத்து பகல் வளர்த்தும்...
பின்னொரு பொழுதில்...
பகல் சிதைத்து ....இருள் வளர்பபதாய்...
என் பருவங்கள்...மாறிய பொழுதிலும்...

என்னை நினைவில் இருத்தி...
யாரிடமாவது விசாரிக்கும்
"அன்பு"...எல்லோருக்கும் கிடைப்பதற்கில்லை.

சந்தோஷங்கள் நிரம்பிய
என் குழந்தை காலங்கள் முடிந்து...
அலுப்புறும் காலங்களில்...
என் பூமி உருளத் துவங்குகையில்...

தலை கோதிச் சாந்தம் செய்கிறது...
சாந்தா டீச்சரின் கருணை முகம்.

எனது சிகரங்கள்...
என் துக்கங்களாகி...
எனது அலைகளால்.....இன்று நான்
மூழ்கடிக்கப்படுகையில்....
நான் இப்போதும் நினைத்துக் கொள்கிறேன்...

உதவிக்கான...
எதிர்பார்ப்பற்ற....
என் பெரும் கடவுளின் துணையாய் ...
என் டீச்சரின்...பேரன்பை.

வாழ்வின் வாசனையைக் கூட...
இந்தக் காலத்தின் "வண்டுகள்" திருடிவிட...

என் மனதின் அழுத்தங்கள் தாண்டி...
பெரும் பேரமைதியாய் ...
சிறு புன்முறுவலாய்...

எனக்குள் நிலைத்திருக்கும்...
என் "சாந்தா"டீச்சரின் ஞாபகங்கள்.

எழுதியவர் : rameshalam (23-Sep-13, 4:31 pm)
பார்வை : 98

மேலே