தமிழ் தேரோட்டும் ஈரோட்டாருக்கு 80ஆவது பிறந்தநாள்...வாழ்த்துவோம்...

எனது ஆசான் ஈரோடு தமிழன்பனுக்கு நாளை 80ஆவது பிறந்தநாள்(28.09.1933)

உன் வார்த்தைகளின் நுனிப் பிடித்து
என் கவிப் பயணம் ....
தேன் சிந்தும் உன் நடைபற்றி
நான் பெற்றேன் தமிழ் அமுதம் ...
பிறந்த நாள் இன்று உனக்கு
சிறந்த நாள் தமிழுக்கு இன்று.....

எம்பி எம்பி பார்த்தனர் பலர் இங்கு -தம்
எழுத்துக்களால் தமிழைத் தொட..இயலவில்லை..
தம்பியென தத்தெடுத்தாள் தமிழன்னை உன்னை எண்பதிலும் எழுதவைத்தாள் எவரஸ்டு நாண.
பிறந்த நாள் இன்று உனக்கு
சிறந்த நாள் தமிழுக்கு இன்று.....

உதய சூரியனின் விரிதலுக்கான
இதழ்களாய் ஒளி விசும் உன் வரிகள்...
இதய இடுக்கில் எங்களிடம் ஊறியிருக்கும்
புதிய வீர அணுக்கள் உன் வார்த்தைகள்....
பிறந்த நாள் இன்று உனக்கு
சிறந்த நாள் தமிழுக்கு இன்று.....

பளீரென்று சிரிக்கும் இரவு நேர
பன்னீர் பூக்கள் என உன் பாடல்கள்...
குளிர்வாதை நீக்கி மானுட உயர்வுக்கு
வெப்ப இரத்தம் பாய்ச்சும் உன் கவிதைகள்...
பிறந்த நாள் இன்று உனக்கு
சிறந்த நாள் தமிழுக்கு இன்று.....

நியாய தரிசனத்திற்கான புதிய
கும்மிகளின் கண்ணிகள் உன் பாடல்கள்...
குமுகாய மாற்றத்திற்கு உனது கவிதைகள்
இமாலய உயரம் தோற்கடிக்கும் அளவுகள்..
பிறந்த நாள் இன்று உனக்கு
சிறந்த நாள் தமிழுக்கு இன்று.....

புதிய வகை புத்தாக்கப் படைப்புகள் என
நதியோட்ட வேகம் மிஞ்சும் தமிழ் படைப்புகள் ...
குதியாட்டம் போட்டு உன் விரல்களில் குவியல்.
அதிசயம் இது.! இன்னமும் எழுதுகிறாய்...எப்படி?
பிறந்த நாள் இன்று உனக்கு
சிறந்த நாள் தமிழுக்கு இன்று.....

மரபில் இம்மண்ணில் பிறந்தவன் நீ -அதையும்
புரட்சி ஊர்களுக்கு திசைகளாக்கினாய் புவிமுழுதும்
கரம் நீட்டி வழிகாட்டி பலரை உருவாக்கியவன் நீ
உரமாய் உளமாய் நிற்போம் உன்வழியில்.உண்மை
பிறந்த நாள் இன்று உனக்கு
சிறந்த நாள் தமிழுக்கு இன்று.....

புவியில் உன் பெயர் நின்று நிலைக்க உனக்கு
கவின் உண்டு பாப்லோ உண்டு பாரதியுண்டு -நீர்
குவியும் மிசிசிபி யோரா உண்டு நானுண்டு -
தவழும் தருணுண்டு .பலருண்டு .உன் புகழ் எழுத..
பிறந்த நாள் இன்று உனக்கு
சிறந்த நாள் தமிழுக்கு இன்று.....

கவின் , யோரா=ஈரோட்டார் பேரப்பிள்ளைகள்
பாப்லோ ,பாரதிதாசன்=ஈரோட்டார் மகன்கள்
தமிழன்பன் தருண்=எனது பெயரன்

தி.அமிர்தகணேசன் (அகன் )

எழுதியவர் : அகன் (27-Sep-13, 9:18 am)
பார்வை : 137

மேலே