[515] ஈரோட்டுப் பாவலரை ஏத்திடுவோம் வாழ்த்திடுவோம்!

நவகவிதை எனும்பெயரில்
நாற்றங்கள் வீசுகையில்
கவின் கவிதை பாடிவரும்
கருத்தான தமிழ்வண்டே!

உழைக்கும் இந்தியனை
உறிஞ்சும் வாரிசுகள்
தழைக்கும் அன்னியராய்த்
தள்ளிவிடும் தமிழ்க்குரலே!

காவியிருள் அலைகளையும்
கறுத்தபகல் நாட்களையும்
தாவிப் புறந்தள்ளத்
தவித்தெழுந்த உயிர்விழிப்பே!

உறக்கத்தைக் கொன்றுவிட்டே
உயர்விழிப்பு தோன்றுமெனப்
புரட்சிக்கு வழிகாட்டும்
புதுக்கல்விப் பாசறையே!

இறந்த தமிழினத்தின்
ஈழக் குழவியழப்
பிறக்குமோ தமிழென்று
பேதலித்த தாய்மனமே!

இதயத்தை விளையாட்டில்
இழந்துவரும் இளைஞருக்கு
மதிவித்தை எல்லைகாட்டும்
மட்டையடி நாயகரே!

மானத்தைப் பூட்டுவது
மதினுட்பம் ஆகாது;
ஆன(த்)தைச் செய்!என்றே
அழைக்கின்ற ஆசானே!

கோழிச் சிறகுமுடி
கொண்டையராய் இல்லாமல்
ஆழிச் சூரியனை
அள்ளிமுடி என்றவரே!

உச்சரிப்பைச் சிவப்பாக்கும்
பச்சைக் கிளிகளென
அச்சமின்றிப் பேச
அழைப்பெடுத்த போர்க்குரலே!

நச்சு வாக்குச் சீட்டுகளை
நம்தாயின் கருப்பையில்
வச்சுத் தையாமால்,
கட்சிப் பால்வினை நோய்
கண்டவளும் மாளாமல்,
சந்தைப் பொருளா தாரச்
சங்கடத்தால் தாயவளும்
சிந்தை மிக நொந்து
சீரழிந்து போகாமல்,
சிந்துமுதல் காவிரியும்
சீர்கெட்டுப் தேயாமல்,
சிங்கள வெறித்தனத்தில்
தங்கத் தமிழினமும்
இங்கழிந்து போகாமல்,
எங்கள் நம்பிக்கை
இடையொடிந்து வீழாமல்
பொங்கும் புதுப்பாடல்
பொழுதுக்கும் நீர்தந்து
மங்காத சூரியனாய்
மறையாத தமிழ்மொழியாய்த்
தங்கிச் செழிப்புடனே
தழைத்துக் கொழித்து
சிங்கமாய்ச் சிறக்கச்
செல் நூறு ஆண்டின்னும்
சேர்ந்தெம்மோ டிருப்பீரே!
நல்வாழ்க்கை இறைதரவே
நான்வேண்டி நிற்பேனே!
பங்கமிலா ஈரோட்டுப்
பாவலரே! வாழிய நீர்!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (27-Sep-13, 10:40 pm)
பார்வை : 71

மேலே