பட்டினிச்சாவு (தாரகை)

என் இந்தியாவின் பெருமையை
எழில் கொஞ்சும் கவி பாட
ஏக்கங்கள் நிறைவாக
எண்ணத்தில் இருந்தாலும்,
கலை இழந்த முகத்துடன்
கஞ்சிக்கு வழியின்றி
கட்ட ஏதும் துணியின்றி
கண்ட இடத்தில் படுத்துறங்கும்
அடித்தட்டு மக்களின்
அவலங்கள் காண்கிறேன்.
அலறல்கள் கேட்கிறேன்.
அடியேன் நான் என் செய்வேன்?
அரசியல் சாசன சட்டம்
அளாதியாய் உதவித் திட்டம்
என்று ஏழை கை கிட்டும்?
பதில் அறிந்தவன் இறைவன் மட்டும்.
கொத்தடிமையாய் சில காலம்.
கொள்ளைகாரனாய் சில காலம்.
பிச்சைக்காரனை சில காலம்.
பித்துப்பிடித்தவனாக சில காலம்.
எத்துணை அவதாரம்
ஏழைகளின் வாழ்க்கையிலே?!
எல்லோரும் கொடுத்துதவும்
எண்ணத்தில் ஒத்திருந்தால்
ஏழ்மைபேயை ஓட்டிடலாம்.
எத்திக்கும் ஒளி ஏற்றிடலாம்.
அந்த பிச்சைகாரனின் சொந்தம்
சொந்தவீட்டில் சுகமாக,
அந்த பைத்தியகாரனின் சொந்தம்
வைத்தியம் செய்யும் வைத்தியனாக.
உறவுகள் இல்லாமல்
உலகினில் எவருண்டு?
உறவுகள் இருந்திருந்தும்
உதவிகள் இல்லாததால்
உயிரை மாய்க்கும் நிலைமைக்கு
உந்தப்பட்டது எவர்னாலே?
தற்கொலையை வெகுமதியாய்
தந்தது யார் நாம் தானே?
ஏழையின் தலை விதி தரித்திரம்.
என்று பேசினோம் தத்துவம்.
அள்ளிக் கொடுக்காவிட்டாலும்,
கிள்ளிக் கொடுத்து உதவலாமே?
உன்னிடம் உள்ள செல்வம்
உன் அறிவால் வந்தது நிச்சயம்.
உனக்கு அறிவை தந்தது
உன் இறைவன் என்பது சத்தியம்.
ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்.
இதயத்தில் சுகமான இனிமையை உணரலாம்.
இம்மை வாழ்விலே சொர்கத்தை பார்க்கலாம்
பட்டினிசாவை நிச்சயம் போக்கலாம்.