ஒரு நட்பின் சமர்ப்பணம்
காலம் பல கடந்தும்
காத்திருந்து எனை துரத்தும்
கரையாத நிழல்களாய்
நம் நட்பின் ஞாபகங்கள் !
உன் மொழிகள் சுமந்து
அலையும் காற்று என் காதில்
உச்சரித்து செல்கிறது எப்போதும்
உன் நினைவுகளை !
இணைந்து நடந்த உன்
காலடி தடம் தேடி
தனியே நடக்கிறேன் நாம்
நடந்த பாதைகளில் !
நீ வாசித்த புத்தகத்தில் என்
விரல் தொட்டு செல்கிறேன் !
உன் மூக்கு கண்ணாடியை என்
முகம் பொருத்திப் பார்க்கிறேன் !
மனதின் ஆழத்தில் நீ
நிறைத்த உன் நேசத்தின்
நினைவுகளை சுவாசித்துக்
கிடக்கிறேன் இன்றும் நான் !
குடை வெளியே பாயும்
மனசு போல் அடிக்கடி
தடம் மாறி போகிறேன்
உன் நினைவுகளின் மழையால்!
பாராதிருக்க ஒரு நாள்
பந்தயம் என்றோம் – என்றும்
தோற்றுப் போய் நிற்கிறேன் நண்பனே
உன் நிழற் படத்தின் முன்னே!