அடைக்கலம் தேடி.....

அன்றொரு நாள் காலைப் பொழுதில்
அமைதியாக இருந்தேன் நான்
அடக்கமாக வந்து நின்றாள்
அவள் தான் என் சாரதா!

அமங்கல அறிகுறிகள்
அலங்கோலமான முகம்
அவள் தானா இவள் என்று
அப்படியே குழம்பி நின்றேன்!

அன்பு மகளாய் வளர்ந்த அவள்
அமைதியின்றி அலைகிறாள் போல்
அழுது ஓய்ந்த கண்களுடன்
அங்கு வந்து அவளும் நின்றாள்!

அவசரமாய் போகணுமாம்
அடுத்த வீட்டில் குழந்தையினை
அனுப்பி விட்டு வந்துள்ளாளாம்
அவளுக்கு என்ன வேணும்?

அமரச் சொல்லி சைகை செய்தேன்
அவ்வாறே அவளும் செய்தாள்
அம்மா எப்படி என்றேன்
அவளும் நல்லம் என்றாள்!

அப்பா என்று தொடங்குகையில்
அடுத்த கணைக்கு இடம் தராது
அவர்களை நான் பிரிந்து விட்டேன்
அண்ணாவோடு இருக்கிறார்கள்!

அவர்கள் பேச்சு வேண்டாம் என்றாள்
அவளின் எண்ணம் புரிந்து கொண்டேன்
அன்பு வார்த்தை பேசி ஒருவன்
அவளை மயக்கி விட்டானாம்!

அம்மாவும் அப்பாவும்
அண்ணாவும் கூட இருக்கிறார்கள்
அனைவரையும் விட்டு விட்டு
அவனுடனே போய் விட்டாளாம்!

அகவை ஐந்தில் ஒரு குழந்தை
அடுத்த குழந்தை வயிற்றினிலே
அறுபது நாள் இருக்கையிலே
அவுஸ்திரேலியா மோகம் வாட்டியதாம்!

அரும்பாடு பட்டு அவள்
அணிகலன்கள் அடகு வைத்து
அடம் பிடித்து கிளம்பினானாம்
அடுத்த மூன்று மாதங்களில்!

அரை மாதம் முடிந்த பின்னே
அரணுலகம் அவன் போன
அந்த வியழம் கேள்வியுற்று
அடங்கியொடுங்கி போனாளாம்!

அதரங்களில் கூட ஒரு
அலங்காரம் போட்டு நிற்கும்
அந்த மகள் சாரதாவா?
அபலையென்று ஆகிவிட்டாள்!

அந்தக் கொடுமை கேட்டு விட்டு
அடிவயிறு கலங்கியதெனக்கு
அவள் செல்ல மகனுக்கு
அகவை ஒன்று ஆகிறதாம்!

அவன் பிறந்த நாளுக்காக
அடகொன்று வைக்கணுமாம்
அவள் வேலை செய்து கொடுக்க
அவசரமாய் கிளம்பி விட்டாள்!

அந்த மகள் வாழ்வு தன்னை
அலசுகின்றேன் நானும் நின்று
அம்மாவோடு இருந்திருந்தாள்
அமராவதி போலிருப்பாள்!

அவனோடு போனதாலே
அரைக் கிழவி ஆகி விட்டாள்
அன்பு கொள்ளும் காதலரே
அரும்பொன்று சொல்லுகின்றேன்!

அத்திவாரம் காதலுக்கு போடுகையில்
அடியோடு பெற்றோரை மறக்கின்றீர்
அரும் காதல் முளைக்கையிலே
அன்றைக்கு உங்களையே மறக்கின்றீர்!

அருந்ததியை பார்த்தவுடன்
அருமைக்காதல் மறவாதிரும்
அப்படியே மறந்திட்டால்
அவ்வாழ்வு பொய்த்து விடும்!

அன்னையவள் இவள் நிலையை
அறிந்திட்டால் அவள் மனது
அனலிடையில் மெழுகாகிப் போவதனை
அறிவாளோ இவள் மட்டும்!

அத்தனையும் பார்த்துக் கொண்டு
அக்கடாவென மேலிருப்போன்
அன்புக்கரம் நீட்டி என்று
அணைப்பானோ தெரியவில்லை!

அவள் விதியும் மாறி ஒரு
அழகு வாழ்வு வந்திட்டால்
அது குறித்து மகிழ்ச்சியுறும்
அன்புத் தோழி நானாவேன்!

அநியாய உலகம் இதில்
அன்புள்ளம் ஒன்றிருப்பின்
அவள் நிலைமை நன்கறிந்து
அடைக்கலமும் தருவீரோ?

எழுதியவர் : திருமதி அச்சலா சுகந்தினி (1-Oct-13, 12:56 pm)
Tanglish : adaikkalam thedi
பார்வை : 323

மேலே