தெளிந்த மனம்
காதல் என்னைத் துறந்தாலும்
கண்ணீர் பரிசு தந்தாலும்
கவலை நானும் படமாட்டேன்
மதுவைத் தவறியும் தொடமாட்டேன்!
துன்பம் என்பது மனத்தளவே
தாங்கிடும் உறுதி எனக்குளதே
அறிவைக் கெடுக்கும் வழியென்று
அறிந்தும் அதிலே விழமாட்டேன்!
மெத்தவும் படித்த படிப்புண்டு
மேதினில் நிரம்பப் புகழுண்டு
வாழும் கடமை எனக்குண்டு
போதையை எதிர்க்கும் துணிவுண்டு!