அம்மா என்றால் அன்பு!

பவள சங்கரி


ஹாய் குட்டீஸ் நலமா?

இன்று விமானம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

உங்களில் நிறையபேர் விமானத்தில் பயணம் செய்திருப்பீர்கள். பலர் பார்த்திருப்பீர்கள். விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார் என்று தெரியுமா? முதன் முதலில் பறவைகள் பறப்பதைப் பார்த்து, நாமும் ஏன் பறக்க முடியாது என்ற ஆர்வத்தில் செயற்கையாக இறக்கையை கட்டிக்கொண்டு பறக்க முயன்றார்கள் நம் முன்னோர்கள். அது முடியாமல்போக, பின் உயரமான இடத்திலிருந்து இறக்கையுடன் குதித்துப்பார்த்தார்கள். ஒன்றும் பயனில்லை. அப்போதிலிருந்து மனிதனின் தேடல் ஆரம்பித்தது!

பிரான்சு நாட்டின் தலை சிறந்த ஓவியர் லியோனார்டோ டாவின்சிதான் முதன் முதலில் இந்த விமானம் கண்டுபிடிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர். அடுத்து சர் ஜார்ஜ் கேய்ல் என்ற இங்கிலாந்துக்காரர் ஆர்னிதாப்டர் என்ற ஒருவகை பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். மூன்றாவதாக டபிள்யூ. எஸ். ஹென்சன் என்ற இங்கிலாந்துக்காரர் மோனோ ப்ளேன் என்ற வகையான விமானத்தைக் கண்டுபிடித்தார். நான்காவதாக, கிளமெண்ட் ஆடெர் என்ற பிரான்சு நாட்டுக்காரர், நீராவி மூலம் இயங்கக்கூடிய ஒரு விமானத்தைக் கண்டுபிடித்து 50 மீட்டர் தூரம் பறக்க வைத்தார். அடுத்து ஓடோ லிலிந்தால் என்ற ஜெர்மனிக்காரர் கிளைடர் வகை விமானத்தை உருவாக்கி பறந்துகாட்டினார். இதன் பிறகுதான் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் முழுமையான விமானத்தை வடிவமைத்தார்கள். 1903 ஆம் ஆண்டு ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்னும் இரு சகோதரர்கள் முதன் முதலில் அமெரிக்காவில் உள்ள வட கேரோலினா என்னும் மாநிலத்தில் உள்ள கிட்டி ஃஆக் என்னும் இடத்தில் விமானம் ஓட்டி, இந்த அரிய சாதனையை நிகழ்த்தினர். விமானம் பறக்கும் முறை இரண்டு விதிகளின் படி விளக்கம் பெறுகிறது , அவைகள், பெர்னோலி விதி, மற்றும் நியூட்டனின் இரண்டாவது இயக்கவியல் விதி! இதன் விளக்கத்தைப் பார்ப்போமா?

முதலில், பெர்னோலி விதிப்படி , ஒரு திரவம் விரைவாகச் செல்லும் போது அதன் அழுத்தம் குறையும். குறிப்பிட்ட ஒரு சூழலில் உள்ள ஒரு நீர்மம் இரண்டாகப் பிரியும் போது இரண்டும் சம அளவிலான தூரத்தை சம நேரத்தில் கடக்கும்.

ஒரு விசையானது ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் பொழுது, அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் முடுக்கம் என்பது அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும். முடுக்கம் அல்லது ஆர்முடுகல் என்பது நேரத்திற்கு நேரம் விரைவு மாறுபடும் வீதத்தைக் குறிப்பது. முடுக்கம் என்பது கால அடிப்படையில் விரைவு மாறும் வீதம் ஆகும்.

வானூர்திகளைப் பறக்க வைக்கிற, நான்கு விசைகள்: ஏற்றம் , எடை, உந்துவிசை, எதிர்விசை போன்றவைகள். மேற்கண்ட இரு விதிகளின்படிதான் விமானம் மற்றும் அனைத்து வான ஊர்திகளும் இயக்கப்படுகின்றன.

கார், பேருந்து போல விமானத்திற்கும் விபத்துகள் நேரத்தான் செய்கின்றன. பெரும்பாலும் விமான விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்கள் , விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், வானிலை மற்றும் வானியக்கவியல் மற்றும் விமான ஓட்டியின் கவனக்குறைவு போன்றவைகளே.

விமானம், குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் இருக்கும். காரணம், அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையைச் சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க ஆரம்பித்துவிடும்.
இன்னொரு சுவாரசியமான தகவல், காற்று உள்ள இடங்களில் மட்டும்தான் விமானத்திற்கு இறக்கைகள் தேவைப்படும். பூமியைத் தாண்டி விண்வெளிக்குச் சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவையில்லை. இப்போது ஓரளவிற்கு விமானம் பற்றி தெரிந்திருப்பீர்கள் அல்லவா?



அம்மா என்றால் அன்பு !

சரி கதைக்கு வருவோமா.. இது கொஞ்சம் வருத்தமான கதை. என்ன செய்வது. இன்பம், துன்பம் என அனைத்தும் சேர்ந்ததுதானே வாழ்க்கை.

தன்னலமில்லாத அன்பு அம்மாவிடமிருந்து மட்டுமே கிடைக்கும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் நான் என்றோ கேள்விப்பட்ட இந்த உண்மைச்சம்பவம். ஒரு ஊரில் மகேந்திரன், சாருலதா என்ற பெற்றோர் வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய அழகிய ஐந்து வயது சிறுவனின் பெயர் மகிழன். மிக அன்பான, அமைதியான குடும்பம். மகிழனுக்கு எப்பொழுதும் அப்பா செல்லம் அதிகம். அம்மா எப்பொழுதும், டிவி அதிகமா பார்க்காதே, ஐ-பாடில் விளையாடிக்கொண்டிருக்காதே, ஒழுங்கா படி, கையெழுத்து பயிற்சி எடு, என்று இப்படி எதற்காகவாவது திட்டிக்கொண்டே இருப்பதால் அம்மாவைவிட அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும் மகிக்கு. ‘குழந்தையை சும்மா விரட்டிக்கிட்டே இருக்காதே, அவனை ஃபிரியா விடு’ என்று அப்பா திட்டினாலும் அம்மா கேட்கமாட்டீங்கறாங்களேன்னு மகிழனுக்கு அம்மா மேல எப்பவும் கோபம்தான். அம்மா தன்னோட நல்லதுக்குச் சொல்றாங்களே அப்படின்னு புரிஞ்சிக்கிற வயசும் அவனுக்கு இல்லை. ஆனாலும் அம்மா எப்பவும் தன்னைப் பற்றியும், தன் நலன் பற்றியும் மட்டுமே நினைச்சிக்கிட்டிருப்பதை அவனால் உணர முடியாமல் இல்லை. இருந்தாலும் அம்மா தன் விருப்பம் போல இருப்பதற்கு விடவில்லையே என்ற வருத்தம் இருந்து கொண்டேயிருந்தது அவனுக்கு. அப்பா என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார், எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் செல்லுவார். அதனாலேயே அப்பாவை ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு.

நல்ல குளிர் காலம். பள்ளி விடுமுறை சமயம். தாங்கள் வாழும் ஜெர்மனி நாட்டில் உள்ள லேய்ப்ஜிக் என்ற விமான நிலையத்திலிருந்து மாமாவின் வீடு இருக்கும் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரத்திற்குச் செல்ல முடிவெடுத்து பயணத்திற்குத் தயாரானார்கள். அப்பாவிற்கு விடுமுறை கிடைக்காதலால் அம்மாவும், மகனும் மட்டும் கிளம்புகிறார்கள். அதில் மகிக்கு சற்று வருத்தம்தான். ஆனாலும் மாமா வீட்டிற்குப் போகப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகமாகக் கிளம்பிவிட்டான். விமானத்தில் காலை உணவு முடித்து, அனைவரும் அசந்து உறங்கிக்கொண்டிருந்த நேரம், பருவ நிலை காரணமாக விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட, தாறுமாறாகப் பறந்த விமானம், விமான ஓட்டியின் கட்டுப்பாட்டையும் மீறி ஒரு மலைக் குன்றில் மோதி, கீழே இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து, வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. வெடித்துச் சிதறிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்து போனது. அந்தப் பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாகியது. விமானத்தின் வால் பகுதி மட்டுமே எரியாமல் இருந்தது. விசயம் அறிந்து மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கடுங்குளிரும் பனிப்பொழிவும் இருந்த காலமது. ஏதோ நடக்கப்போகிறது என்ற உள்ளுணர்வில் அவசர அவசரமாக தம் மகனை இறுகத் தழிவிக்கொண்டது மட்டுமே சாருலதாவிற்கு இறுதியாக நினைவில் இருந்தது. விமானம் வெடித்துச் சிதறியதில் பல மைல் தூரத்திற்கு அனைவரும் வீசியெறியப்பட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்த சாருலதா, சுய நினைவிற்கு வந்தபோது, முதலில் அவள் வாய் மகி.. மகி கண்ணா என்றே முணுமுணுத்தது. கண்கள் சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்திருந்தது. மகனின் மெல்லிய முனகல் எங்கோ கேட்க, மெல்ல எழ முயன்றவளின் கால்கள் அசையவில்லை. ஏதோ பலத்த அடி பட்டுள்ளது மட்டும் தெரிந்தது. உயிர் போகும் வலியைப் பொருட்படுத்தாது, கால்களை இழுத்துக்கொண்டு தவழ்ந்த வாக்கிலேயே முனகல் சத்தம் வந்த திசை நோக்கி நகர்ந்தாள். சற்று தூரத்தில் குளிருக்கு நடுங்கியவாறு, பயத்தில் உறைந்துபோய், அம்மா.. அம்மா.. என்று முனகிக்கொண்டு மகி சுருண்டு கிடப்பதைக் கண்டவுடன் போன உயிர் திரும்பி வந்தது அவளுக்கு. நல்ல வேளையாக, தெய்வாதீனமாக, மகிக்கு அடி ஒன்றும் பலமாகப் படவில்லை. அதற்குக் காரணம் அவன் பனி மூடிய செடிகள் நிறைந்த அடர்ந்த ஒரு புதரின் மீது விழுந்திருந்ததுதான்.

அவனை நெருங்கியவுடன் மகி அம்மா.. என்று வந்து கட்டிக் கொண்டான். இனி அங்கிருந்து தப்பிக்கும் வழி ஒன்றும் புரியாமல், கட்டாயம் இறைவன் அருளால் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன், குளிரில் நடுங்கும் மகனை இறுக்கி அணைத்தவாறு தன் குளிராடைக்குள் நுழைத்து அவன் மேல் பனி விழாதவாரு தன் உடலினால் அவன் உடலை மறைத்தபடி, விநாயகர் அகவலில் ஆரம்பித்து, தானறிந்த அத்துனை சுலோகங்களையும் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.. ஒரு கட்டத்தில் பனியில் விறைத்துப் போய் சுருண்ட நிலையிலும் மகனின் அணைப்பைத் தவறவிடவில்லை அந்தத் தாய் எனும் அன்பு தெய்வம். இதற்குள் மீட்புப் பணியினர் நான்காவது நாளாக ஹெலிகாப்டர் மூலமாக தேடிக்கொண்டிருந்தனர். அவர்கள் கண்ணில் மூட்டையாகச் சுருண்டு கிடக்கும் ஏதோ தென்பட விரைவில் இறங்கி வந்து பார்த்தபோது, பனியில் உறைந்து உயிர் விட்டிருந்த அந்தத் தாயின் அடியில் உயிருடன் அச்சிறுவன் முனகியபடிக் கிடந்தான். உடனே அவனை மீட்டு முதலுதவி அளித்து, காப்பாற்றியபோதும், மகனுக்கு தம் உயிரைக் கொடுத்து மறைந்த அந்தத் தாயின் உடலை மட்டுமே மீட்டுக் கொண்டு செல்ல முடிந்தது.

தாயன்பிற்கு நிகராக இந்த உலகில் வேறு என்ன இருக்க முடியும். தேவையென்றால் தாம் பெற்ற குழந்தைகளுக்காக தம் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டாள் அவள்!

எழுதியவர் : பவள சங்கரி (29-Sep-13, 4:30 pm)
பார்வை : 1450

மேலே