உலர் வாழ்வு

தொட்ட விரல் விட்டுக் கொடுக்கும்
கட்டை விரல் பிரிப்பதில் கர்வம் கொள்ளும்
சூண்டு விரல் சுதாரித்துக் கொள்ளும்
நடுவிரல் கொள்ளும் நர்த்தனத்தால்

பேனாவில் பிறந்ததை -இன்று
விரலின் விசையால் விதையாக்குகிறோம்
கானல் நீர் கருவானது
மழைநீர் மரணித்தது

விடைகொண்டு வீதியில் அலைந்தோம்
கேள்விகள் முட்களாய்
படையமைத்து பாதை கொடுத்தோம்
பகுத்தறிவு பரிகாசமாய்

துணையொன்று வேண்டி
உதிரத்தை உயிராக்கினோம்
சதைஎன்று சாமானியர்களின் கையில்
சரித்திர பிழையாய்

சருகென்று சந்தர்ப்ப காற்றால்
உதிர்த்துத்தள்ள
புதைகுழியில் பொறுமையுடன்
புரிந்துபோன புதிராய்
எரியும் எரிமலைக்கு உலர் உயிராய்

அன்னத்திற்கு கன்னத்தில் கைவைத்து
அழுகைக்கு தொழுகையை அர்த்தமாக்கினோம்
அவதாரத்தில் அடங்கிவிடாத
பொருளாதார புன்னகைக்காக
விழுதொன்று தேடி வதங்கிப் போனோம்

குறைபல கொண்டு கறைபல களைய
நிறை உலகில் நித்தியர்கள் நிழலாய்
தொட்டு நடந்தால் கொட்டிவிடும்
விட்டு நடந்தால் விழுங்கிவிடும்

சாகாசத்தால் சட்டென்று சமாளித்து சறுக்கிவிடுவோம்
சரித்திர புகழை இழந்து விடுவோம்
விட்டுக் கொடுப்பதை விட்டுவிட்டு
தட்டிக் கொடுப்போம்
தலைமுறையின் வரலாறுக்காய்!

எழுதியவர் : ஸ்ருதிஹா (6-Oct-13, 11:42 am)
பார்வை : 48

மேலே