ஒரு விரலாய்...மறு குரலாய...இருப்பாயடா..(தொடர்-13---அகன் )
பேசுகிறாயோ...கதறுகிறாயோ..நானறியேனே
ஆனால்
கூசுகிறதெனக்கு உன் மொழி புரியாதலால்.
என் செய்வேன் ..
நீ பேசும் மொழி எது?நான் பேச இயலவில்லையே.
அது ..
பூவின் மொழியா?புதுப் புனல் மொழியா? சொல்
எதுவென்று
கன்னங்களில் செம்மை படர இதழ்கள் குவித்து
நீ
என்ன மொழி பேசுகிறாய்?கற்றுக் கொடேன் எனக்கும்
அழியாத மொழி எதென்று ஆய்ந்து நாளும் நீ
அறிவாய்..
மொழி அறிவாய் . மொழியே நம்மிரு விழிகள்என
உணர்வாய் ....
காற்றின் மொழி அறிவாய் அதில் சாதிகள் கிடையா..
நாற்றின் மொழி நீயறிந்தால் உழைப்பின் உயர்வு புரியும்
புலரும் கதிரின் மொழி அறி. அதில் புவி முழுதும்
நாளும்
மலரும் மானுட பொதுவுடைமை பாங்கு புரியும்
உனக்கு.
விதியின் மொழியென்று ஒன்றில்லை காண் இது
உண்மை
நதியின் மொழி அறி. அதில் சோம்பலற்ற உழைப்பு
தெரிக்கும்
அழும் ஏழை மழலை மொழி அறி .அதில் பசியின் வலி தெரியும்.
மெழுகு ஒளியின் மொழி அறி. அதில் உருகும் தியாகம் புரியும்
வாழை மொழி அறி. வகையாய் பிறருக்குதவும் பண்பதில் புரியும்
உழைப்பின் மொழி அறி.உண்மையின் மொழி அறி
உன்னை உணர்வாய்.
ஏட்டின் மொழி அறிவதில் பயனென்ன சொல்.
உலக
கூட்டின் மானுட மனமொழி அறி.அதில்தானுண்டு மனிதம் .
(தொடரும் )
.