என்றும் இளமையாய்

என்றும் இளமையாய்...!

அப்படியே இளமையாக
இருக்கிறது
இந்த நதியும், சுழல்
காற்றும், கரையோர
பசுமை காடுகளும்
நான் மட்டும் வயது
முதிர்ந்தவனாய்
கரையோரத்தில் நின்று
கொண்டிருக்கிறேன்



புவி வாழ்க்கை
முடிக்குமுன்
பிறந்து வளர்ந்த
இடத்தை பார்க்க
வந்தவன்

கண்ணீர் வழிய
அடம்பிடித்தவனை
அம்மா அடித்து
இழுத்து பள்ளிக்கு
இதன் வழியாக
கொண்டு சென்றதை
நினைத்த நிலையில்

அதே அம்மா
என் தலையை
வருடி கொடுப்பதாய்
இப்போதைய சூழல்
இந்த நதியின்
மூலம்
என் மனதுக்குள்

அன்று
நதியில் வாழ்ந்த
தேவதை ஒன்று
ஊரை அழிக்க
வந்த புயற் காற்றை
தள்ளி வைத்து
சுழன்று
கொண்டிருக்கும் வண்ணம்
ஊரை காப்பாற்றியதாய்
கதைகளும் உண்டு
அப்பொழுது அவை
எனக்கு நிசமான
நிகழ்வு

நாளை என்னை போல்
வேறொருவர் வயது
முதிர்ந்து இதே
போல் நிற்க கூடும்

அப்பொழுதும் இளமையாய்
ஓடி கொண்டே
இருக்கத்தான் போகிறாய்

அது எப்படி
நீ மட்டும் என்றும்
இளமையாய்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Nov-24, 9:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : endrum ilamaiyaai
பார்வை : 121

மேலே