வெதும்பாதீர்கள்…
வெதும்பாதீர்கள்….!!
21 / 10 / 2024
கொட்டித் தீர்த்தது கன மழை
முட்டித் தளும்பியது ஏரியில் அலை
குளம் குட்டை ஆறுகள் நிரம்பி
இருகரையும் அணைத்தபடி ஓடியது வெள்ளம்
கரையோர குடிசைகள் எல்லாம் கரைந்து
மண்ணோடு மண்ணாய் நீரோடு நீராய்
அடித்து செல்ல ஏழைகளெல்லாம் மழையில்
வானமே கூரையாய்... பூமியே தரையாய்.
ஏ..! மழையே ஏனிப்படி பேயாட்டமாடி
ஏழைகளின் கண்களில் கண்ணீராய் நிறைகிறாய்?
மும்மாரி பொழிந்தால் உழவுனுக்கு கொண்டாட்டம்.
மும்மாரியும் சேர்ந்தே ஒருநாளில் பெய்துவிட்டால்
விளைந்த பயிர் நீரில்மூழ்கி தற்கொலை கொள்ள
வளைந்த முதுகை நிமிர்த்த முடியாமல்
வளர்த்த உழவுனும் நடுத்தெருவில் நிற்க
இந்த கோரத் தாண்டவம் ஏனோ?
நாங்கள் செய்த பாவம்தான் என்ன?
இயற்கையோடு நாங்கள் செய்யும் போர்தானோ?
இல்லை எல்லாம் எங்களுக்குத் தெரியும்
என்கின்ற மமதையின் உச்சகட்டமோ. தெரியவில்லை.
விலங்கினை அடிமை செய்தோம்..அறம்
சாய்ந்தது.
மனிதனை அடிமை செய்தோம்.மனிதாபிமானம்
இறந்தது.
இயற்கையை அடிமை செய்யத் துடிக்கிறோம்.
விபரீதம் ஆனது.
நீயும் எத்தனை நாளைக்குத்தான் பொறுப்பாய்?
பொங்கி எழுந்து சில நேரம்
எங்களைத் தண்டித்து பொங்கிப் போகிறாய்.
மனிதர்களே..! விழித்து கொள்ளுங்கள்.
இது ஒருபாடம்..
இயற்கையோடு கைகோருங்கள். இயற்கையோடு நட்புருங்கள்.
இயற்கையை போற்றுங்கள். இயற்கையாய் வாழுங்கள்.
எத்தனைதான் ஊர்க்குருவி உயரஉயர பறந்தாலும்
செங்கழுகாய் ஆகிவிட முடியாது. புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கும் இது தெரியும். இருந்தும்
தெரியாத மாதிரி நடக்கா தீர்கள்.
நடந்து நட்டாற்றில் நின்று வெதும்பாதீர்கள்.