கனவுகளே, கனவுகளே
“கனவின் மாயா லோகத்திலே நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே” என்பது பழைய தமிழ் திரைப் படப் பாடல். பழமைக்கும் புதுமைக்கும் இடைப்பட்ட காலமாகிய தமிழ் திரைப் பட வரலாற்றில் பொற்காலம் எனப்படும் காலத்தில் வெளி வந்த பாடல் ஒன்று, ‘கனவுகளே கனவுகளே, காலமெல்லாம் வாரீரோ” என கனவினை வரவேற்கிறது.
சில நேரங்களில் நாம் வானத்தில் பறப்பது போலவும், நீரில் மூழ்கி தத்தளிப்பது போலவும், மற்றும் சில நேரங்களில் முன் பின் தெரியாத நபருடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டதைப் போலவும் கனவுகள் காண்கிறோம். பறப்பது முன்னேறத் துடிப்பதையும், மூழ்கித் தத்தளிப்பது, முன்னேற்றப் பாதையில் வரும் தடைகளையும், வண்ணக் கனவுகள், எண்ணக் கோலத்தைப் பிரதிபலிக்கும் எனவும் விளக்கம் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு நாம் ஏன் கனவு காண்கிறோம், எப்படி கனவு காண்கிறோம், அதன் நன்மை தீமைகள் என்ன என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
நமது ஆயுட் காலத்தில் ஆறு ஆண்டுகளை நாம் கனவில் கழிக்கிறோம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இவ்வாறு ஆறு ஆண்டுகள் நாம் கனவுகளில் களிக்கிறோம், இன்பத்தில் திளைக்கிறோம். ஒவ்வொரு தொன்னூறு நிமிடத்திற்கு ஒன்றாக ஒரு இரவில் குறைந்தது ஐந்து நிமிடமும் அதற்கு மேலும் நாம் கனவு காண்கிறோம். ஒரு கனவு ஐந்து நிமிடம் என்றாலும் தூக்கச் சக்கரத்தின் முடிவில் காணும் கனவு நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் நீடிக்கும்.
இத்தகைய கனவுகளில் நாம் நமது மூளையில் பதிந்துள்ள உருவங்கள், எண்ண வடிவங்கள், மற்றும் உணர்வுகளையே காண்கிறோம். சிக்மண்ட் ப்ராய்டின் ”சைக்கொஅனலிடக்கல்” தியரியின்படி
கனவுகளில் நமது சுய நினைவு அற்ற ஆசைகள், எண்ணங்கள், திகில் காட்சிகள், கடல் காட்சிகள், சண்டைக் காட்சிகளும் இடம் பெறும்.
இவ்வாறு நாம் காணும் கனவுகள் இரண்டு அடுக்கு கொண்டவை. மேற்புற முதல் அடுக்கில் உருவப் பதிவுகளும், உட்புற இரண்டாம் அடுக்கில் உண்மைகளும் உள்ளன. ஒரு எண்ணம் பற்றிய மிகையான நினைவுகளுடன் நாம் உறங்கச் செல்லும்போது, மூளையின் மின் சுற்றுக்கள் தூண்டப் படுவதால் நாம் கனவு காண்கிறோம் என ஆலன் ஹாப்சன் மற்றும் ராபர்ட் மெக்காலே போன்ற அறிவியல் அறிஞர்கள் கூறுவர். உறக்கத்தின்போது சோம்பிக் கிடக்கும் உடம்பிற்கு உத்வேகம் அளித்திட மூளை முனைந்து கனவுகள் வாயிலாக உடம்புடன் பேசுகிறது. அதனால்தான் அடிக்கடி ஒரே கனவு கண்டால் மூளை நமக்கு ஏதோ சொல்ல விரும்புகின்றது என விரித்துக் கூறுவர்.
உண்மையில், கனவுகள் மனிதனின் நினைவுகள் எனும் அடுக்கு அமைப்பினில் புதியதொரு அடுக்கினை நெய்வதால், உணர்ச்சிக் கொந்தளிப்பினைத் தடுத்து, மன அழுத்தத்தில் வீழ்ந்து விடாமல் நம்மைக் காக்கின்றன.
நடைமுறையில் செய்ய இயலாதவற்றை கனவில் நாம் செய்வதால், மற்றும் நம் நெறி, ஒழுக்கம் போன்ற கட்டுப்பாடுகளை மீறி கனவுகளில் நாம் இயங்குவதால் கனவுகட்கு கட்டுப்பாடு கிடையாது என கூறி வருகின்றோம். மாறாக, நடைமுறையில் நாம் கனவுகளை கட்டுப் படுத்த முடியும். இவ்வாறு கட்டுப் படுத்திக் காணும் கனவுகளை தெளிவான ஒளிக் கனவுகள் என்று கூறுவர். இத்தகைய கனவுகளைக் காணவே நமது முன்னாள் குடியரசு தலைவரும், அறிவியல் வல்லுனருமான முனைவர் அப்துல் கலாம் அவர்கள் அழைப்பு விடுக்கிறார். கனவினைக் கட்டுப் படுத்தும் சக்தி எவர்க்கு உண்டெண்றால், எவரொருவர், கனவுக்குள் ஒரு கனவு காண்கிறாரொ அவர்க்கு அது சாத்தியப்படும். இதற்கு தூக்கம் அவசியம் இல்லை. ஏனெனில் மனது தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருக்கும். இவை நிச்சயமாக ஒருவரின் மன நிலையினை, மகிழ்ச்சி/சோகம் என எந்த வகையிலாவது பாதிக்கும். கட்டுப்படுத்தப்பட்ட தெளிவான ஒளிமிக்க இத்தகைய கனவுகளும், ஆழ்ந்த தூக்கத்தில் நாம் காணும் கட்டுப்பாடில்லாத கனவுகளும் நமக்கு மிக மிக அவசியம். கனவுகள் பழுது பார்க்க இயலாத மனோ தத்துவ ரீதியிலான பழுதுகளை நீக்கும் மருந்து என்பதால் நமக்கு உடம்புக்கு உணவு போல் மூளைக்கு ஒரு மருந்து ஆகும்.
எனவே, கனவு காண்பவரை தயவுடன் எழுப்பாதீர்கள். கனவு காணுங்கள். கட்டுப்பாட்டுடனோ, கட்டுபாடு இன்றியோ நிறைய கனவுகள் காணுங்கள்