கலைமகளைப் பாடிடு மனமே !
இசைக்கின்ற வீணை நாதத்திலே
இவ்வுலகம் மயங்கும்
இனிக்கின்ற ராக இன்பத்திலே
மறுபடியும் இயங்கும்
கலைமகளைப் பாடிடு மனமே
அவளருளைத் தேடிடு தினமே...
[இசைக்கின்ற வீணை...]
தாமரை மலர்மீது என்றும் தவம்
இப்படி சென்றது எத்தனை யுகம்
மனதார வேண்டிட தீர்ப்பாள் பாவம்
தப்பாது அருள்வது வேணியின் வேதம்
கலைமகளைப் பாடிடு மனமே
அவளருளைத் தேடிடு தினமே...
[இசைக்கின்ற வீணை...]
தானாக ஓடிவந்து செல்வம் சேரும்
யாவுமே நிலையாது எல்லாம் தீரும்
கலைவாணி வழங்கிய செல்வம் கூடும்
கல்வியே கரையாது காலமும் வாழும்
கலைமகளைப் பாடிடு மனமே
அவளருளைத் தேடிடு தினமே...
[இசைக்கின்ற வீணை...]
தானெனும் அகந்தை இருக்காது நெஞ்சில்
நாமெனும் எண்ணம் நிறையுமே அன்பில்
தனக்காக என்றும் வாழாது மனதும்
தாயவள் தாள்பற்ற சீராகும் உலகம்
கலைமகளைப் பாடிடு மனமே
அவளருளைத் தேடிடு தினமே...
[இசைக்கின்ற வீணை...]
நான்முகன் தேவியே நான்மறை வேதமே
வான்மழை போலவே வார்த்திடு ஞானமே
தேன்தமிழ் கானமே நீந்திடும் நாவிலே
உன்மகன் பாரிலே உயர்வான் நாளையே
கலைமகளைப் பாடிடு மனமே
அவளருளைத் தேடிடு தினமே...
[இசைக்கின்ற வீணை...]
கற்றவர் சொந்தம் களிப்புடன் தருவாயே
கற்றதை என்னுள் பதிந்திட வைப்பாயே
உற்றவர் பெருமை காத்திட அருள்வாயே
மற்றவர் யாவரும் வாழ்த்திட மகிழ்வாயே
கலைமகளைப் பாடிடு மனமே
அவளருளைத் தேடிடு தினமே...
[இசைக்கின்ற வீணை...]
எழுத்தை எனக்கு வரமாய் தந்தாயே
செழித்த புலமை பெற்றவர் தந்தாயே
தெளிந்த அறிவை எனக்கும் தருவாயே
பழுத்த பழமாய் இனிக்கச் செய்வாயே
கலைமகளைப் பாடிடு மனமே !
அவளருளைத் தேடிடு தினமே !!
[இசைக்கின்ற வீணை...]
**************
**************
["எழுத்தை எனக்கு வரமாய்...." என்ற வரி... நம் எழுத்து தளத்தைச் சொல்கிறது ]