நிலமெல்லாம் ரத்தம் -குஜராத் படுகொலைகள்

நிலமெல்லாம் வழிந்தது ரத்தம்
நினைவெல்லாம் உயிர்களின் சத்தம்
கதையல்ல கற்பனையல்ல இது சத்தியம்
காந்தி பிறந்த மண்ணின் கருப்புச் சரித்திரம்
..........
படித்த போதும் கேட்ட போதும்
கண்ணீரில் உப்புக் காய்ச்சிய
திட்டமிட்ட படுகொலைகளை
திடமாய் எழுத முற்படுகிறேன்
........
மைகொண்டு எழுத மறுதலிக்கிறது
கண்ணீர் கொண்டு எழுதச் சொல்கிறது
கண்ணீர் கதறல்களை காட்சிகளை
மனசாட்சிகளை கொண்டு கேளுங்கள்
.......
எட்டுமாதக் கர்ப்பிணிப் பெண்
எமனாக நிற்கும் அரக்கர்களின் முன்
அஞ்சி ஓடுகிறாள் உயிருக்காய்
கெஞ்சிகிறாள் விட்டு விடும்படி
.....
இரக்கத்தை தொலைத்தவர்கள்
வயிற்றை வாளின் முனையால் கீறி
சிசுவை துண்டு துண்டாக்கி
கோரத் தாண்டவமாடிய பின்
கொள்கை ஜெயித்தார்கள்!
....
பத்தொன்பதுபேர் ஓர் வீட்டில்
உயிருக்குப் பயந்து உள்ளே
வீடு பூட்டி உயிர்காத்து இருக்கையில்
தண்ணீரை பீய்ச்சி அடித்து
உயரழுத்த மின்சாரம் பாய்ச்சி
கொன்றொழித்த கொடுமை!
.......
பிழைத்தால் போதுமென்று
பீதியில் ஓடும் சிறுவர்களை
சுருக்குக் கயிறுகளை வீசி
நாய்களைப் போல் சுருட்டிப் பிடித்து
அடித்தும் வெட்டியும் எரித்தும்
வேட்டையாடினர் வேடுவர்கள் !
.......
பூட்டிய வீடுகளிளெல்லாம்
எரிவாயுவைச் உட்செலுத்தி
உயிர்களையெல்லாம் எரியூட்டி
கரிக் கட்டைகளாக்கினார்கள்
எமனின் எடுபிடிகள் !
......
கண்ணில் காணும் பெண்களை
சிறுவர் சிறுமியரின் கண்முன்னே
கண்டபடி கற்பழித்தார்கள்
காமுகக் கயவர்கள் !
.......
முழு ஆடையில் மானம் மறைக்கும்
முன்மாதிரிப் பெண்களை எல்லாம்
ஆயுதங்களின் முனையில்
அம்மணமாக்கி ரசித்தார்கள்
ஆண்மையின் அவமானங்கள்!
................
வனிகத்தலங்களும் வழிபாட்டுத் தலங்களும்
குறிவைத்து சூறையாடப்பட்டதும்
கொலைக்கான பட்டியலை கையில்
கொண்டு வந்தே புரிந்த கொலைகளும்
இன்னும் இதுபோன்ற கொடுமைகளும்
எண்ணிலடங்கா...சொல்லிலடங்கா..
.....
நவீன நீரோவின் கண்ணசைவில்
உத்தமரின் உத்தரவுகளில்
உக்கிரமாக வக்கிரமாக
நடந்தேறிய நரபலிகள்
நாடறியும் உலகறியும் !
.......
அரசின் அசுரபல அனுசரணையில்
காவல் துறையின் துணையோடே
கலவரமென்ற காட்டுமிராண்டித் தனங்கள்
கண்முன்னே கசிந்து கிடக்கிறது
பிணவாடைகள் இன்றும் மூக்கினிலே
ரத்தத்தின் சுவடுகள் இன்னும் மண்ணில்
.....
சத்தியவான்களாய் சாதனையாளர்களாய்
சாந்த சொரூபிகளாய் பாவனை செய்தாலும்
முகமூடியே முகங்களை மறைத்தாலும்
உண்மை முகம் மாறாது மறக்காது
அகோரப் பசியில் நரபலியாடியது
அத்துனை சுலபத்தில் மறந்தா போகும்!
....

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (21-Oct-13, 7:36 am)
பார்வை : 391

மேலே