இவை ஒன்றும்...கவிதையல்ல.
அடைக்காத கதவாய்
திறந்து கிடக்கிறது
என் கண்கள்.
வாழ்வின்
எல்லாக் கோணங்களும்
அலைந்து திரியும்
அதன் பாதையில்...
ஏனோ..
உன் பிம்பம் மட்டும்
பிடிபடவே இல்லை.
***********************************************************
மழை பெய்து கொண்டிருக்கிறது.
குளிர் தாளாமல்...
மல்லாந்து விட்ட
இந்த மழைப் பூச்சியை
எப்படி நிமிர்த்துவது
என்றுதான் ...
எனக்குக் கவலையாக இருக்கிறது.
************************************************************
குழந்தை பிறந்த வீடு
சப்தங்களால் நிரம்பி இருக்கிறது.
பேசுபவர்களின்
மொழி தெரியாத குழந்தை...
அழத் துவங்குகிறது
தன் அந்நியம் தாளாமல்.
***************************************************************
கனவில் தெரிந்த
கழுகு ஒன்றைத்
தேடிக் கொண்டே இருந்தேன்...
நேரம் கிடைக்கும் போதெல்லாம்.
இப்படித்தான்...
கனவைத் துரத்துவதிலேயே...
காணாமல் போய்விடுகிறது
என் பாதி வாழ்க்கை.
******************************************************************
வெயில்...
சர்ப்பம் போல் வளைந்து செல்கிறது...
இந்தச் சாலையெங்கும்.
பாவம்...இந்த இரயில் பூச்சி.
காலில் செருப்புக் கூட இல்லாமல்
கடந்து கொண்டிருக்கிறது
இந்த நெடுஞ் சாலையை.
*******************************************************************