சிட்டுக்குப்பெண் பிறந்தாள்,
சிட்டுக்குப்பெண் பிறந்தாள்,
சீமைக்கெல்லாம் சேதிவிட்டாள்.
பட்டுவிட்ட இனம் வாழ
பார்வதியே பிறந்தாளென்றாள்.
பேரும் வைக்க வேண்டுமென்றாள்
ஊருக்கெல்லாம் அழைப்பு வைத்தாள்.
பெண்ணரசி வீர்மங்கை
பெயர் சூட்ட வேண்டுமென்றாள்.
வாழைக்கும் சொன்னாளே!
வரவேற்பு செய்வதற்கு.
மாவிலையும் தேடினாள்.
தோரணங்கள் கட்டுதற்கு.
மயிலோட நாட்டியம்
மட்டுமல்ல கேளுங்கள்
குயிலோட பாட்டுந்தான்
கூடவே உண்டென்றாள்.
அலங்காரம் செய்வதற்கு
அன்னமே வருகுதென்றாள்.
கோலமிட்ட ஆடைநெய்து
கொண்டு வரும் வானமென்றாள்..
காரிருள் மையெழுத
கட்டாயம் வருமென்றாள்.
வானவில்லும் வருகுதென்றாள்
வண்ணங்கள் வளையல் கொண்டு.
சூரியன் வருகிறான்
சுட்டியொன்னு சூட்டியிட.
சந்திரனும் வருகிறான்
சந்தணத்தில் பொட்டுயிட.
மின்னலும் வந்திடும்
பொன்சரடும் தந்திடும்.
மேகமும் பந்தலிட்டு
முத்துமணி கோர்த்திடும்..
இடிமுழங்கி ஓசையுடன்
வெடிவெடிக்க வருகிறான்.
காற்றுங்கூட வருகிறான்
கால்க் கொலுசுந் தருகிறான்.
விண்மீன்கள் மலர் தூவும்.
பன்னீரை மழை தெளிக்கும்.
வான்குவிந்து குடைபிடிக்கும்.
வனங்குலுங்கி குலவையிடும்.
பழங்கொண்டு கிளிவரும்.
பால்கொண்டு பசுவரும்..
தென்னை இளநீருங் கொண்டு
பெண்சுமக்க ஆனை வரும்.
அவரவர்க்கு உகந்தபடி
அனைவருமே வந்திடுவர்.
அன்புடன் அழைக்கின்றாள்
அவசியமாய் வந்திடுவீர்.
பெண்ணாகப் பிறந்தவளை
பெருமை செய்யவேண்டுகிறேன்.
கண்ணாகப் போற்றுங்கள்
காலத்தின் தொடர்சசியவள்.
கொ.பெ.பி.அய்யா.