இளிச்சவாயர்களா நாங்கள்

பட்டாசு வெடித்து
மத்தாப்புக் கொளுத்தி
சுற்றுப் புறச்சூழலை
அழிப்பதும், விலங்களும்
நோயாளிகளும் வயதானவர்களும்
பாராட்டும் செயல்தான்!
காசைக் கரியாக்குவது
நல்ல சேமிப்புத்தான்!
எந்தக் கால இரசனை
இன்னும் இங்கு சதிராடும்?
பருவ காலங்கள் மாறி
வறட்சி பலஇடங்களில்
அவ்வப்போது புயல்வெள்ளம்
சில இடங்களில்!
விலைவாசி விண்ணைத்
தொட உண்பொருட்கள்
நாளுக்கு நாள் விலகிச் செல்ல
வெடிவெடித்து இயற்கையை
அழிப்பது எங்களுக்கு
இனிப்பான அழிவுப் பொழுதுபோக்கு!
அஞ்சித்தான் திரியில் தீ வைப்போம்
வெடிக்குமுன்னே தூர ஒடிவிடுவோம்.
விரும்பும் பொருளைச் சாப்பிடுவோம்
அணிந்து அழகு பார்ப்போம்.
நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும்
அழிக்கும் இந்தப் பொழுது போக்கில்
மட்டும் எங்களில் பெரும்பாலோர்
எச்சரிக்கையாய் இருப்போம்.
தலையில் வைத்தோ, கழுத்தைச்
சுற்றியோ, மூக்கில் நாக்கில்
காது கண்களில் வைத்தோ
வெடிக்க மாட்டோம் விரும்பும்
வேடிக்கை என்ற போதும்!
எங்களுக்கு நாங்களே தீமை செய்வோமா?
உலகம் கொஞ்சங் கொஞ்சமாக அழிவது
கற்றார்க்கும் கைநாட்டுகளுக்கும்க்கூட
நல்ல பொழுது போக்கு!
நாளைய சமுதாயம் பற்றி
நமக்கேன் கவலை.
சட்டம் அனுமதித்தாலும்
இயற்கைக்கும் உயிரினத்துக்கும்
எதிரான செயல் என்பது
எங்களுக்குத் தெரியாதா?
மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.
அதுபற்றிச் சிந்திக்க
இளிச்சவாயர்களா நாங்கள்?

எழுதியவர் : இரா.சுவமிநாதன் (26-Oct-13, 3:13 pm)
பார்வை : 168

மேலே