கானல் நீர் மீன்கள்
இரு விழிகள் அழுதிட கல்லறைத் தூக்கங்கள்
கலைந்தெழுந்து யாழிசைக்கும் நாங்கள்
பிரம்மனவன் தூக்கத்தில் இழைந்த ஓவியங்கள்
அவன் தூரிகை தனில் நிறம் காயுமுன்
உயிரின் ஈரம் காய்ந்தது எங்களுக்கு
தளை தட்டிய தமிழ் வெண்பாக்களாய்
செவிவழி சென்று போகும் தாலாட்டுகள்...!
தாய்கட்டிய முந்தானைப் பாயில் படுத்துறங்கவும்
பால்சோறுண்டு அவள் மடிதனில் கிறங்கவும் - வாய்ப்பில்லை....!
பிரித்த எமனைக் கூட மன்னித்துவிட்டோம் ஆனால்
சண்டாளப் பிரம்மனைக் கழுவிலேற்ற வேண்டுகிறோம்
காரணம்,
ஈனப்புணர்ச்சியில் ஜனிக்கும் உயிர் மந்திரத்தை
இப்பூவுலகிற்கு அளித்தமைக்கு....
இங்கே ஓருயிரின் ஆயுள் - மனிதர்களின்
வெற்றுடல் கலவியின் அந்திம முனகல்களில் முற்றுப்பெறுகிறது.
இரைதேடிச் செல்லும் பறவை இரைக்கிரையாகும் - அங்ஙனம்
உயிர் தேடிச் செல்லும் உயிரின் -
உயிரே உயிர் பறிக்கும் கொடுமை
இத்திரு நாட்டிளம் அரிவையர் பெரும்பான்மையோர்
கருவறைகளை கல்லறைகளாய்ச் சுமப்பதினால் ..!
உயிர் வளர்க்க யாக்கைதனை யாசித்து
உயிர்ச்சதை நரம்புதிரமென இறகைப் போல
நுழைந்தோம் உங்கள் கர்ப்பவீட்டினில் - வசிக்க
விதியில்லாமல் உயிர் கலைக்கப்பட்டு சொர்க்கத்தின்
வரவேற்பறையில் சுவடுகளாய் - நாங்கள் ...
இனியொரு கர்ப்பப் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் ..?
கானல் நீர் ஓடையாம் உங்கள் கர்ப்பங்களில் நீந்த
பிரயத்தனப்பட்டு மடிந்த கோடான கோடி மீன்கள் - நாங்கள் ..!
- மனோபுத்திரன்
2000 - 2010 வரை கருக்கலைப்பில் இந்தியாவில் மட்டும் உயிரிழந்த சிசுக்களின் எண்ணிக்கை சுமார் 2750423 .