தூத்---தேறிக்க-கே-எஸ்-கலை

சூரியனைப் பார்த்துச்
சூடாய் ஒரு கவிதை !
நிலவைப் பார்த்து
குளிர்ச்சியாய் ஒரு கவிதை !
பூமியைப் பார்த்து
பூரிப்புடன் ஒரு கவிதை !

நல்லிணக்கம் கருதி
மதங்களுக்கு ஒரு வசைப்பாட்டு !
ஊழலை எதிர்த்து
அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கை !
கயவர்களைத் தாக்கி
கடுப்புடன் ஒரு கட்டுரை !

காதலுக்கு
கவிதையாய் ஒரு கடிதம்!
காமத்திற்காக
சாமத்தில் ஒரு கூவல் !
கற்பழிப்புக்காக
காத்திரமாய் ஒரு கட்டுரை !

பண்புடன் வாழ
பவித்திரமாய் ஒரு ஏவல் !
பகுத்தறிவுப் பேசி
பாங்காய் ஒரு பாடல் !
பகுத்தறிவிலன் நோக்கி
பண்புமீறி ஒரு சாடல் !
====
பிஞ்சிப் பிராணிகளும்
கற்பழிப்பால் சாகிரதாம் !
கஞ்சிக்கு வழியின்றி
பலர்சாகும் நிலையுண்டாம் !
கண்ணெதிரே காணொளியில்
இசைப்பிரியா கதறுகிறாள் !

இன்னுமின்னும் எத்தனையோ
எண்ணம்வரும் போதெல்லாம்...
மின்னிமின்னும் இலக்கியமாய்
எண்ணம்போல எழுத்தாகும்...
என்னசெய்ய எங்களுக்கு
எழுதுவதே தொழிலாகும் !

வேறன்ன வேண்டுமெமக்கு
வந்தெழுத கருவுண்டு !
நாளைக்கு தீபாவளி
கொண்டாட வேண்டாமோ ?
வேகமாய்ப் பயணித்தால்
வேளைக்கே வீடு போவோம் !

நாளை நமக்கு தீபாவளி
கொண்டாட போவோமே !
பட்டாசு வெடியோடு
பலகாரம் சுவைப்போமே !
நீயும்நானும் ஒன்றென்று
இங்குவந்து சொல்லு தோழா !

எழுதியவர் : கே.எஸ்.கலை (1-Nov-13, 9:26 pm)
பார்வை : 193

மேலே