உனக்காகவும் எனக்காகவும்-கே-எஸ்கலை

மாபெரும் சபைதனில் நீநடந்தால்
மாலைகள் சூட்டிட கரம்வருமா ?
மமதையில் ஊறிய பேதைகளின்
மறைமுக தாக்குதல் தான்வருமா ?
===========
உணவின்றித் திணறிக் கிடப்போனை
உயர்த்திடும் தத்துவம் நீபாடு – உன்
உணர்விற்குப் பல்வலி கொடுப்போனை
மனத்தினில் தரித்திட தடைபோடு !
பாதைகள் உனக்குத் தேவையில்லை-புதுப்
பாதைகள் அமைப்பது உன்வேலை
சோதனை பலர் தரவந்தாலும்- அவர்
சாதனை உனக்கே தந்திடுவார் !
செல்லும் சாலையில் சலசலக்கும்
சருகுகளின் சத்தம் சங்கீதம் – அவை
எள்ளும் வேளையில் உரமாக்கி
இமயம் நோக்கிடு அதுபோதும் !
திறமைக் கண்டு திணறிடுவர்
தீயோர் தொழிலே அதுவன்றோ !
மடமைக் கண்டு குமுறாதே
மகுடம் உனக்காய்க் காத்திருக்கு !
வருவாய் போதையில் வாடாதே- நீ
வெறுவாய் வார்த்தையில் மயங்காதே !
இலக்கணம் மீறி வரைந்தாலும் – நீ
இலக்கணப் புருசனாய் வாழ்ந்திடப் பார் !
மாபெரும் சபைதனில் நீநடந்தால்
மாலைகள் சூட்டிட கரம்வருமா ?
மமதையில் ஊறிய பேதைகளின்
மறைமுக தாக்குதல் தான்வருமா ?
எவரஸ்ட் மலையே அண்ணாந்து
பார்க்கும் எழுத்தோடு வாழுகிறோம்
எவரோ வாய்வரும் புகழோ இகழோ
எதுவந்தால் நமக்கென்ன சொல்தோழா ?
உனைவிட அதிகம் ஊரையேப் பார்
உனக்கொருநாள் தலைவணங்கும் பார் !
சொல்லோடுப் பொருளைச் சரியாய்ச் சேர்
சொற்களை வென்றிட ஏது போர் ?