இப்போது மழைக்காலம் ===============அகன்
இப்போது மழைக்காலம் -மன்ணிலத்திற்கு
குளுமையின் நீர்க் கோலம்..
மழை மண்ணின் உயிர்த்துளி
வேரின் விருந்து உயிரின் மருந்து
பூக்களின் புன்னகை இலைகளின் குளியல்
புல்வெளியின் முத்துச்சிதறல்
வயல்களின் குளுமைக் கூடாரம்
தார்ச்சாலையின் குளிர்ப் போர்வை
சாலையில் சிதறிய டீசல் துளிகளுக்குள்
வண்ணக்கோலம் படைக்கும்
நீர்ம தூரிகை!
மேக மோதலின் கசிவு
பருவகால பன்னீர்த்தெளிப்பு
நில வெப்பத்தின் மறுஒளிபரப்பு
மண்ணின் அறம் ! குடைகளின் வைரி!
நீர்ம புடவைக்கான நூலிழைகள்!
இயற்கை வேள்வியின் குளிர் தீ நாக்குகள்!
வான இசைக்குழுவின் இராக சிதறல்கள்!
மத்தள இடிக்கான நீள்(ர்)குழல்!!
காற்றுடன் இணை சேரும் இசை!
குமரர்களுக்கு வரம்! பச்சைகளுக்கு உரம்!
தமிழ் திரைகளுக்கான திடீர் தழுவல்கள்,
ஈர அழகுக்கான பொங்குமா அருவி!
வெப்பக்கால மக்களின் வரவேற்பு;
பொழியும் பொழுதுகளின் முணுமுணுப்பு!
காற்றின் நடனத்திற்கான நீர்மத்திரை!
குளிர்ச்சிக்கு தொடுதிரை! கோடைக்கு விடுமுறை!
பூமி மேளத்தின் மீது , நீள்(ர்) விரல்கள் எழுப்பும்
தாள கீதம்!
விழிகோளத்தின் விரிவு மீறிய பொழி்மேனி!
மழலையர் கப்பல் இயக்கும் காலவெளி!
மழலையர் கனவுகள் சுமக்கும்
காகிதக்கப்பல்கள் பயணிக்கும் நீர்பாதை!
மண்ணிண் புதை மணம் கிளப்பும் ஊதுகுழல்!
மலர்கூட்டத்தின், புல்வெளி பரப்பின்
மகிழ்வலை எழுப்பும் மந்திரகோல்!
பசுமை சாம்ராஜ்ஜியத்தின் பிரம்மா!
புல் நுனி அமரும் நீர்ம ராஜா!
முறுவலும் மூர்க்கமும்
மென்மையும் முழக்கமும் –என
பன்முகம் காட்டும் மாயக்கண்ணாடி!
நாணமுற்றால் ஒற்றைப்பின்னல்,
சினமென்றால் பெருவெள்ள பின்னல் – என
நடை பழகும் நீர்ம புதிர் கன்னி!
காய்ந்த நிலங்களில் பசுமை முடி வளர்க்கும்
அஸ்வினி!
சன்னல்களில் ஒலி எழுப்பும்
விரலில்லா மோகினி!
தவளைகளின் சேர்ந்திசைக்கு
சுரம் கூட்டும் சுரப்பெட்டி!
ஈசல் கூட்ட வாழ்நாள் முடிக்கும்
நீர்ம ஆணை!
உழைப்பாளிகளின் கட்டாய ஓய்வு நாள்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
