யாரோ எழுதிய கதை

அந்தக் கதையில் யாருமே நடிக்கவில்லை. கதாபாத்திரங்கள் எல்லாமே தற்சயலாய் உருவாகி தன்னிச்சையாய் நகர்ந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் சைக்கிளில் செல்கிறார். அந்த தெருவில் இருக்கும் குடிநீர்க்குழாயில் கூட்டமாய் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளுக்கு பிள்ளைகளை திணித்துக் கொண்டு வாகனங்கள் பறக்கின்றன. ஹெல்மட் அணியாமல் நிறைய பேர்கள் சாலையில் பயணிக்கிறார்கள். அதில் யாரோ சிலரை மட்டும் போக்குவரத்து போலிசார் நிறுத்தி ஏதோ விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

வானம் மேகமூட்டமாய் இருப்பது போல தோன்றினாலும் சூரியன் இப்போதோ அப்போதோ வெளியே வந்து வெயிலை கக்குவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தது. நடைபாதை ஓரத்தில் தனது கடையை போட்டு மொத்த விலைக்கு வாங்கி வந்திருந்த டூப்ளிக்கேட் ரேபான், போலிஸ் கூலர்களை கடை பரப்பிக் கொண்டிருந்தவனை வேடிக்கைப் பார்த்தபடி புகைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். மின் தொடர்வண்டி பரபரப்பான நகரத்தைப் பற்றிய கவலைகளின்றி திமிராய் ஆட்களை ஏற்றிக் கொண்டு தண்டவாளங்களில் பறந்து கொண்டிருந்தது. டி.டி.ஆர்கள் புகைவண்டிக்குள் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டு சோதனையை செய்வதற்காக சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பதினோரு மணி வாக்கில் மிகப்பெரிய ஜவுளிக்கடைகளும் சூப்பர்மார்க்கெட்டுக்களும் சுறு சுறுப்பாய் இயங்க ஆரம்பித்திருந்தன. நடு ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்த மாடுகளை பிடித்து வைத்து பராமரிக்க ஒரு நாதி இல்லை இந்த ஊரில் என்று கூறிக் கொண்டே நடு ரோட்டில் காறி உமிழ்ந்தபடி பைக்கில் பறந்து கொண்டிருந்தான் ஒருவன். நெரிசலான ரோட்டை கடக்க முயன்ற ஒரு வயதானவரைப் பற்றி யாரும் அக்கறை கொண்டிருக்கவில்லை. யாரோ மூன்று பேர் முதல் நாள் இரவு பார்த்த கில்மா படத்தைப் பற்றி பேசி சிரித்தபடி நகரத்தின் வேறுபகுதியிலிருந்த ஒரு டீக்கடையில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

புதுசா வந்த ஹிண்டு பேப்பர் நல்லா பின்றான். எல்லா பேப்பர் காரனையும் பின்னுக்குத் தள்றானா இல்லையான்னு பாரும் வோய்... வெற்றிலையை துப்பிய படியே... அந்த அலுவலக வாசலில் இருந்த கடையில் நண்பரிடம் சொல்லிக் கொன்டிருந்தார் ஒருவர். இன்னும் கொஞ்சம் சிமிண்ட் கலந்துக்கப்பா.. அதட்டிக் கொண்டிருந்த மேஸ்திரியை சட்டை செய்யாமல் வேலை செய்து கொண்டிருந்தார் ஒரு கட்டிடத் தொழிலாளி. நீ ரிஜிஸ்டர் பண்ணிட்டியா.... பண்ணலேன்னா உடனே பண்ணு கீழ விழுந்து செத்தா சங்கம் மூலமா வூட்டுக்கு துட்டு கிடைக்கும்டா.... லூசுப்பயலே...பேசிக் கொண்டே 4வது மாடியின் சாரத்தில் இருவர் பேசியடியே சாந்து பூசிக் கொண்டிருந்தனர்.

பேருந்து நெரிசலை சாக்காக வைத்துக் கொண்டு ஒரு பெண்ணின் புட்டத்தை உரசியவனை பார்த்து முறைத்த படி நாயே.. நாயே உன் அக்கா தங்கச்சி மேல உரசுவியா ராஸ்கல் என்று பாய்ந்தாள் அந்தப் பெண். கூட இருந்தவர்களும் சேர்ந்து அடிக்க அடுத்த நிறுத்தத்தில் அவன் இறக்கிவிடப்பட்டான். டிக்கெட் எடுங்க சார்.. டிக்கெட்..... கண்டக்டர் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார். சித்தப்பா வீட்டுக்கு போய் என்ன பேசுறதுன்னு எனக்குத் தெரியலை அங்க போய் பாத்துக்குறேன். பத்திரிக்கைய கொடுத்து வா சித்தப்பா கல்யாணத்துக்கு எங்களுக்கு யார் இருக்கான்னு சொல்றேன்... வருவாருமா நீ போன வை வண்டில கூட்டமா இருக்கு... போனை அணைத்தவனை காலில் நறுக்கென்று மிதித்து விட்டுப் போனவரைப் பார்த்து....

அறிவு இருக்கா சார் காலை மிதிக்கிறீங்க என்று கோபித்தான். காலை மிதித்தவர் அதை சட்டை கூட செய்யாமல்...அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தார். பக்கத்து தெரு பள்ளிவாசலில் உச்சி வேளைத் தொழுகைக்காக பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்துல நீ வரல நான் போய்டுவேன்டா ஒரு இளம்பெண் யாரிடமோ கோபப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து சென்ற ஒருவன்.. ஒருமணி நேரமா நான் பள்ளிவாசல் பக்கம்தான் நிக்குறேன்.. நீ எப்ப வருவ சொல்லு இன்னிக்கு மதியம் 3 மணிக்கு நான் ஊருக்கு கிளம்புறேன் பணம் அர்ஜன்ட் ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா என்று போனில் பேசி கெஞ்சிக் கொண்டிருந்தான் இன்னொருவன்.

வேகமாய் வந்த ஒரு ஆட்டோ வழியில் குறுக்கிட்ட நாயின் முதுகில் இடிக்க அது அந்த வீதியையே அலற வைத்தபடி ஓடிக் கொண்டிருந்தது. நாயின் சப்தம் கேட்டு அந்த வீதி முனையில் இருந்த பச்சை கேட் போட்ட வீட்டுக்குள் இருந்த இன்னொரு நாய் குலைக்க.... வீட்டின் அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்தவன் விழித்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான் முதல் நாள் இரவு அவனுக்கும் உமாவுக்கும் ஏற்பட்ட சண்டை அவள் கோபித்துக் கொண்டு போனது எல்லாம் நினைவுக்கு வர.....வலியோடு பிரிந்த காதலியை நினைவிலிருந்து துரத்தி விட்டு போர்வைக்குள் மீண்டும் சுருண்டு கொண்டான். அவன் வீட்டின் வாசலை தொட்டிருந்த ஒரு சேல்ஸ் எக்ஸியூட்டிவை காம்பவுண்டிற்குள் இருந்த நாய் உற்றுப் பார்த்து உறும....

இன்னிக்கு டார்கெட்ட முடிக்கலேன்னா வேலை போய்டுமே என்ற கவலையில் அடுத்த வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். வீட்டின் சுமை அவன் நடையில் தெரிந்தது.

அந்தக் கதையில் இப்படி எல்லாம் இருந்தது. யாரோ காதலித்தார்கள். யாரோ செத்துப் போனார்கள். யாரோ திருமணம் செய்து கொண்டார்கள். யாரோ இறுக்க அணைத்துக் கொண்டு காமத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். இந்த நாட்டை நான் மாற்றிக் காட்டுவேன் என்று யாரோ ஒருவன் மேடையில் ஏறிப் பேசி கொண்டிருந்தான். கவிதை எழுதிக் கொண்டிருந்தான் ஒருவன் ....நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையிலிருந்தான் ஒருவன்... ஒருத்தி பிரசவித்தாள் ஒருத்திக்கு கருக்கலைந்தது. இப்படி எல்லாமே எல்லோருக்கும் ஆங்காங்கே நடந்து கொண்டே இருந்தது. என்ன ஒன்று ஒன்று நிகழ்கையில் அது தனக்கு மட்டுமே நிகழ்ந்து விட்டதாக எல்லோரும் தனித்தனியாக நினைத்துக் கொள்வதுதான் அந்தக் கதையின் உச்சபட்ச காமெடி.

இணையத்தை விட்டு சிலர் நகர்வதே இல்லை. பலர் தொலைக்காட்சியை விட்டு நகர்வதே இல்லை. சிலர் கொலை செய்ய திட்டமிட்டனர். பலர் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். சினிமா நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்ய பலர் இருந்தனர். பத்திரிக்கைகள் பரபரப்புக்காய் பிசாசாய் அலைந்தன. நல்ல புத்தகங்களை வாங்கி சில வாசித்து விமர்சித்துக் கொண்டிருந்தனர். எழுதுவது ஒரு கலை என்று யாரோ ஒரு மூத்த எழுத்தாளர் அங்கே பேசிக் கொண்டிருந்தார். சாமியார்கள் நல்வழியும் காட்டினார்கள், காமக் களியாட்டமும் போட்டார்கள். நிறைய பிச்சைக்காரர்கள் இருந்தார்கள், அனாதைகள் இருந்தார்கள். அப்பாவிகள் இருந்தார்கள். கொடுமைக்காரர்கள் இருந்தார்கள். நல்லவர்கள் இருந்தார்கள். நல்லவர்களை கொடுமைக்காரர்களும் குறுக்குப் புத்திக்காரர்களும் ஏமாளிகள் என்று விமர்சனம் செய்து கேலியும் செய்தனர்.

கடவுள் இல்லை என்று ஒரு மேதாவியும் கடவுள் உண்டு என்று இன்னொரு மேதாவியும் பேசிக் கொண்டிருந்தனர். ஒரே சப்தமாகவும் இரைச்சலாகவும் ஓட்டமாகவும் அந்த கதை ஒரு இடத்தில் கூட நிற்கவே இல்லை.....எல்லோரும் ஏதோ ஒன்று செய்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் அவர் செய்வது சரி என்று தோன்றிக் கொண்டிருந்தது. எல்லோருமே தன்னை அடுத்தவர் முன்பு நல்லவராய் காட்ட முயன்று கொண்டிருந்தனர். திருப்பு முனைகளும் துயரமும், சந்தோசமும், நகைச்சுவையும், வலியும், பிரம்மாண்டமும் நிறைந்த அந்த கதையில் ஒரு அர்த்தமும் இல்லை என்றாலும் கதையில் யாருமே நடிக்கவில்லை. எல்லோருமே அங்கே ஏதோ ஒரு செயலைச் செய்து கொண்டே இருந்தனர். அவர்களுக்கு கதையில் அவர்கள் எப்போது வந்தார்கள் என்றும் தெரியாது எப்போது போவார்கள் என்றும் தெரியாது.

அது பற்றிய பல அபிப்ராயங்களை அவர்கள் கொண்டிருந்தனர். அவை எல்லாம் மிகப்பெரிய பிரம்மாண்ட கற்பனைகள். அவற்றை எல்லாம் நான் எழுதி நீங்கள் வாசிக்க முடியவே முடியாது. கோடி கடவுளர்களை அவர்கள் கொண்டிருந்தனர். அவர்களின் சொர்க்கங்களில் பாலாறும் தேனாறும் ஓடுமாம். அங்கே யாருக்கும் பசிக்கவே பசிக்காதாம் ஆனலும் உண்பார்கள். உண்ண நிறையவும் இருக்கும். அழகிய பெண்கள் இருப்பார்கள் அப்ஸசரசோடு கட்டிப் பிடித்து ஆடலாம். ரம்பை ஊர்வசி மேனகைகளை படுக்கைக்கு அழைத்து சரசம் செய்யலாம். மது குடிக்கலாம். ஒரு தொல்லையும் இல்லாத ஒரு வாழ்க்கை அது ஆனால் அவர்களின் நரகம் மிகக் கொடுமையானது அங்கே எண்ணைச் சட்டிகளில் போட்டு அவர்களை பொறிப்பார்கள். ஆனால் எண்ணெய் எங்கிருந்து வாங்குவார்கள் என்று தெரியாது. கை கால்களை பிய்த்து எடுப்பார்கள் முகத்தை நெருப்பிலிட்டுப் பொசுக்குவார்கள். இப்படி நிறைய வேதனைகள் இருப்பதாக இவர்கள் சொல்லிக் கொள்வார்கள். ஏனென்றால் நரகம் தண்டிக்குமிடமாம். சொர்க்கம் சீராட்டும் இடமாம்.

இப்படி அந்தக் கதையில் இருக்கும் அத்தனை பேரும் மிகப்பெரிய கற்பனைவாதிகள். அவர்களின் கற்பனையில் இருக்கும் கோடாணு கோடி உலகத்தை தலையில் சுமந்த படி அவர்கள் எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார்கள். யாரும் மற்றவர்களை அவர்களாய் பார்க்க மாட்டார்கள். கொண்டிருக்கும் அபிப்ராயத்தை வைத்தே கணிப்பார்கள், சிரிப்பார்கள, சண்டை போடுவார்கள்.

அந்தக் கதையில் என்னைப் போல ஒரு கிறுக்கன் உண்டு. அவன் அந்தக் கதையை வாசித்தபடியே அந்தக் கதை பற்றி ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பான்...ஒரு சிலர் வேறு வழியில்லாமல் அதை வாசிக்கவும் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் கதை எப்போது ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது என்பது போல எப்போது முடியும் என்றும் தெ........ரி..........யா..............து......

அதனால் கதையை நான் தொடர்ந்து கொண்டிருருக்கிறேன்.... நீங்களும்...தொ...ட... ரு .......ங்......

எழுதியவர் : Dheva.S (13-Nov-13, 11:37 am)
பார்வை : 215

மேலே