போற்றிடுவோம்

போற்றிடுவோம்....!
30 / 04 / 2024

தென் மதுரை வீதியிலே நடைபயின்று
தென் பொதிகை தென்றலென உடல்தழுவி
தென்னகத்தின் புகழ் எட்டுத் திக்கிலுமே
விண் முட்ட ஓங்கி எங்கும் பரவிடவே
காஞ்சி நகர் மாடங்களில் தவழ்ந்து வந்து
கொஞ்சும் கடல்மல்லை கரையோரம்
வஞ்சியென கற்பாறை மாறிய மாயங்கள்
தஞ்சமென தரணியெங்கும் பறை சாற்றும்
தஞ்சையெனும் பெருநகரில் எழும்பி நிற்கும்
புஞ்சைநில வயல் நடுவில் தலைநிமிரும்
விண்ணகர பெருவுடையார் பெருங்கோவில்
மண்ணுலகில் கொண்டுவந்த பெருங்கருணை
ஓடிவரும் காவிரியின் வேகம் குறைத்து
நாடிவரும் மாந்தர்களின் தாகம் குறைக்க
தேடிவந்து கட்டினானே கல்லணை ஒன்றை
காலம் கடந்து நிற்கிறதே சரித்திரம் சொல்லி
முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
கடையேழு வள்ளல் ஆனான் ஓரி
மண்ணுக்கு போராடினான் சோழன்
பெண்ணுக்கு உயிர் தந்தான் பாண்டியன்
இமயத்தில் கல்லெடுத்தான் சேரன்
கடல்கடந்து கடாரம் வென்று
மடல் விரித்த மலரெனவே
மணம் பரப்பி... மனம் பரப்பி
சேர சோழ பாண்டியனும்
வாழ்ந்த... வாழ்ந்து காட்டிய மரபினை
வாழ்நாள் முழுதும் கொண்டாடுவோம்
வாழ்வில் பின்பற்றி நடந்திடுவோம்.
சங்கம் வளர்த்த தமிழ் மகளை
பங்கம் வராது காத்திடுவோம்.
சிங்கமென சிலிர்த்து எழுந்திடுவோம்
அங்கமதை விட்டு உயிர்போனாலும்
தங்கமென தமிழை நாம்போற்றிடுவோம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (30-Apr-24, 7:28 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 27

மேலே