நான் பித்தன்
விடிய விடிய உழைக்கிறேன்.
விடிந்தவுடன் விடிந்துவிட்டதென்று
விழித்திருந்து காலையை வரவேற்கிறேன்
உறக்கத்தை தொலைத்தேன்
எதற்காக ?
பணத்திற்காகவா..........?
பகட்டு வாழ்விற்காகவா......?
வினாக்களை தேடுகிறேன் தனிமையில்
விடைகளை தொலைத்தேன் இளமையில்
பரிகாரம் தேடுகிறேன் பகல் வேஷத்தில்........
நான் யார்..........?
கதிரவனை தொலைத்துவிட்டு
விடியலை தேடும் வினோதன்.
பூக்களின் வாசனையை
வேர்களில் தேடும் பித்தன்.
தொலைத்த நிமிடங்களை
நொடிகளில் தேடுகிறேன்
நாடிகளின் நச்சரிப்பில்
நாட்களை மறக்கிறேன்
உறங்க வேண்டுமென
கண்கள் கதறுகின்றன
உறங்கிவிடாதே
கனவுகள் எச்சரிக்கின்றன.
இரத்த அழுத்தம்
வீம்புக்கு கொக்கரிக்கிறது
துடிக்கும் இதயம்
வலிகளில் துடிக்கிறது.
நம்பிக்கையே....!
என் தன்னம்பிக்கையே....
எனை சடலமாக சாய்த்துவிடாதே !
எனது வெற்றி செய்தியால்
என் அம்மாவின் பூரிப்பை
நான் ரசிக்கும் வரையாவது
எனை காப்பாற்று போதும்.
----------------------------