நான் யார்

நான் யார் என்றே
நாளும் என்னை
நானே கேட்கிறேன்.
பதிலே கிடைக்கவில்லை.
படைத்தவன் எங்கே?
பார்த்தால் கேட்பேன்
தேடிப் பார்த்தேன்
அவனும் கிடைக்கவில்லை.
பெற்றவள் சொன்னாள்
பெயர் ஒன்று வைத்தாள்
பெருமாள் மகனென்றும்
அடையாளம் தந்தாள்.
பயிலும் காலத்தில்
மாணவன் என்றனர்.
வேலை தேடினேன்
வெட்டி என்றனர்.
அலுவலில் இருந்தேன்
ஆசிரியன் என்றனர்.
துணையாள் வந்தாள்
கணவன் என்றாள்.
குடும்பம் ஆனது
தலைவன் ஆனேன்.
குழந்தைகள் பிறந்தனர்..
தந்தை என்றனர்.
பேரர்கள் வந்தனர்
தாத்தா என்றனர்.
பழுத்தும் முதிர்ந்தேன்..
பெருசு என்கிறார்
இத்தனை அடையாளங்கள்
எனக்குத் தந்தனர்..
இவை அத்தனையும்
எதுவரை இருக்கும்?
மூச்சு நின்றால்
போச்சு எல்லாம்..
சவம் என்பார்
சாம்பல் என்பார்.
மெய்யாகவே நான் யார்?
மேலோன் இரகசியமது.
இளமை முதலே
எழுதுகிறேன் நான்..
அதுதான் அடையாளமோ!
கவிஞனுக்கு மரணமில்லை.
கண்ணதாசனும் சொன்னானே.
கவிஞன்தான் நான்.
கவிதைகள் என் அடையாளம்.
இது அழியாத அடையாளம்..
காலம் வாழும் வரை
நானும் வாழ்வேன்..
மண்ணாக மலையாக
விண்ணாக விளைவாக
அண்டமே அனைத்துமாக
ஒளியாக இருளாக
ஒழிவிலாப் பரமாக
கண்டமிலாக் கருவாக
கதிராக நிலவாக
காண்பதும் காணாதாக
தாரகை நெருப்பாக
தண்செய் வளமாக
காற்றாகக் கடலாக
கார்மேகக் கருணையாக
உயிர்களாக உலகமாக
உற்றநல் பருவங்களாக
இயற்கையாக எழிலாக
இயக்கமாக இறைவனாக
அத்தனையும் நானாக
ஆயுளெனும் இலயாக
வித்தாக வினையாக
விதிசெய் மூலமாக
சுற்றுவேன் சுகமாக
சுதந்திரமே நானாக.
நானே மாயையாக
ஆனாலும் நிலையாக.
கொ.பெ.பி.அய்யா.