ஒருத்தி
சாம்பல் யாவற்றையும் உண்ணலாம்
அதனால் அரை வயிறு நிறையும்
எனது இந்த சம்பாத்தியம்போதாமல் நீயும் இறந்துவிட்டாய்
அடுப்பங்கரைச் சாம்பல்
கோழி நீச்சலடித்து குளிக்கும் சாம்பல்
எல்லாம் தீரும் முன்னமே
நாம் அதனை நீரூற்றி பிசைந்து உண்டோம்
நீயும் நானும் சாம்பலால் படைக்கப்பட்டவர்கள்
உணர்வுகளால் கரைந்துபோனவர்கள்
இருந்தும்
என்னைப் புரிந்துகொள்ளும் நாழிகை வரவில்லை உன்னிடம்
அங்கு ஒருவன் எரிந்து சாம்பலாகி காத்திருக்கிறான்
வா ஓடி வா
பசி இல்லை என்போம்
மனிதச் சாம்பல் வயிற்றை நிறைக்குமா?
அதற்கு நம் பசி தெரியுமா?
போடி போ
என் பிள்ளை உன் அடி வயிற்றில் உதைத்து
பொக்குளை உடைத்து
வெளியே வரப்போகிறான்
என் சப்பாத்துக்களை அணிந்து நடக்கப்போகிறான்
நான் கொண்ட மகிழ்ச்சியை உனக்கு உணர்த்த முடியவில்லை
நாழிகை வரவில்லை
என்றுதான் நினைக்கிறேன்
இல்லையென்றால்
முற்றத்து மண்ணில் ஊறியிருக்கும் அவன் சிறுநீரில்
புல் முளைக்குமா?
அது தானாக முளைக்கவில்லை
என்னைவிட்டு அகன்றுபோய்
நீ இறந்துவிட்டாய்
நஞ்சு உனக்கு பசளையா?
சிறிய கால்கள் பெரிய சப்பாத்துக்கள்
கால் மாத்தி கால் மாத்தி
என் மகன் அணிந்து போவதைக் கண்டு கழியும்
நீ உணராத நாழிகைகள்
என் பத்தினியே
நீயும் எரிந்திருக்கலாமே
உனது சாம்பல் மேட்டிற்கு மகனையும்
கூட்டிக்கொண்டு வந்திருப்பேன்
உன் சாம்பலில் கால்பட கொடுப்பனவு இல்லை எங்களுக்கு
அறைக்குள் சென்றுவிட்டாய்
இன்னும் குளித்துக் கொள்கிறாய்,உடுத்தும் கொள்கிறாய்
பச்சை,மஞ்சள்,சிவப்பு,கறுப்பு
சீலையின் மிச்சங்களால்
பூக்கால்,பூக்கை வைத்து சட்டை தைப்பது யார் என் மகனுக்கு