நாய் பூனை விளையாட்டு

இரவு வீட்டில் நல்லா வாய்க்கு றுசியாக மீன்கறி சமைத்திருந்தாள் என் மனைவி. முன்பு இந்த றுசியான கறியை உம்மாதான் சமைப்பாங்க . உம்மா கறிசமைத்த காலங்களில் இந்த கதை எனக்குள் வரவில்லை இருந்தும் இந்தக் கதையின் தொடக்கம் அப்போதிலிருந்தே தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

சரி விசயம் இதுதான் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு ஒரு சிகரெட்டையும் புகைத்துக்கொண்டு முன் வாசலில் நின்று வானத்தை சிறிது நேரம் உற்றுப்பார்ப்பதும், நிலத்தில் கிடக்கிற சிறிய கற்களை காலால் உதைப்பதும் எனது வாயிலிருந்த சிகரெட்டில் பாதி எரிந்துவிட்ட நிலையில் பூனையின் அழுகைச் சத்தம் கேட்கிறது. நாயும் சத்தமிடுகிறது. கள்ளனைக் கண்ட நாயின் சத்தமில்லை அது இன்னொரு நாயின் படம். அன்றைய தினப்பத்திரிகையில் ஒட்டியிருந்த இறைச்சித்துண்டை வாசம்பிடித்து வந்தது என்று ஊருக்குள் பேசுகிறார்கள்.

பத்திரிகை பல துண்டுகளாக கிழிந்து கிடக்கிறது. விடிந்ததும் வீசும் காற்றில் அது பறந்துபோய்விடும். அந்த வீட்டின் சொந்தக்காரர்களில் ஒருத்தி வாசலை அழகுபடுத்தும்போது அதனை அகற்றிவிடுவாள். இத்தோடு பத்திரிகையின் கதை முடிந்துவிடுகிறது. நாய்க்கு இன்னும் கோபம் போகவில்லை. இறைச்சிவாசம் இன்னுமிருக்கிறது. தனது கண்ணுக்கு முன் சாதுவான பூனை வந்தாலும் வள் வள் என்று கத்திக்கொண்டே இருக்கிறது. இதனை அந்த வீட்டுக்காரர்களில் ஒருவன் கண்காணித்து பின் ஒரு சில நாட்களில் இந்த நாயை அடித்துவிரட்டிவிட்டான். இப்போது அமைதி.

ஆராரோ ஆரிவரோ ஆரடித்து நீ அழுதாய்.......
சாப்பிடுங்கடா செல்லம்
அச்சச்சோ என்ற புள்ள நல்லமில்லா சாப்பிடுங்க
இல்லாட்டி நாயை கூப்பிடுவேன்
நாயே வா என்ற புள்ள சாப்பிடுதில்ல
வா நாயே வா

நாய் மீண்டும் வருகிறது

கிணற்றடியை தோண்டி கட்டிலிடுகிறது, மெத்தையுமிடுகிறது. உறங்குவதற்கு நல்ல இடம். ஈரலிப்பு. குளிக்கும் பெண்களையும் சும்மா காசில்லாமல் பார்க்கலாம். "அடி படுக்கவேறு இடமில்லயா இவள்ற நாய்க்கு. கெணத்தடிய கெண்டாட்டி பத்தியமில்ல" நாயின் வருகை நிலைத்திருக்கவில்லை. விரட்டியடித்தாள் குளிக்க வந்த பெண்.
அவள்
பயத்திலும், அவசரத்திலும் முதுகுப்புறம் தேய்த்த சவற்காரம் பாய்ந்து விழுகிறது கிணற்றுக்குள். தண்ணீர் தன் கைகளால் வாங்கி தேய்க்கிறது கால் கைகளை.குளித்து வெளியேறி மணக்க மணக்க குடத்திற்குள்ளும், வாளிக்குள்ளும் ஏறியமர்ந்து ஊருக்குள் போகிறது

எழுதியவர் : பைசால் இலங்கை (21-Jan-11, 6:03 pm)
சேர்த்தது : a.a.faisal
பார்வை : 455

மேலே