என் தாயே என் குருவே

என் தாயே என் குருவே!
இப்படியும் ஏன் வளர்த்தாய்?
இன்னும் நான் அப்படியே-இங்கு
இருப்பதுவும் சோதனையே!

வாழ்ததுப் பாடி வளர்த்தாயே!
வசை மொழிகள் தெரியலையே!
காழ்ப்புணர்ச்சி ஊட்டலையே--நானும்
கள்ளம் பேசப் பழகலையே!

கூடி வாழச் சொன்ன தாயே!
கோபங்காட்ட முடியலையே!
ஓடி உதவ விட்ட நீயே--என்னை
தேடி ஓடச் சொல்லலையே!

பாசங் காட்டிச் சென்ற தாயே!
வேசம் போட அறியலையே!
அன்பை ஊட்டிப் போனவளே---வேறு
ஆசைப்படவும் தோணலையே!

மெய்யே பழக்கிப் பறந்தாயே!
பொய்யை மறைக்கக் கூடலையே!
கையை நீட்டக் கடிந்தாயே---பணப்
பையைத் தேடப் படிக்கலையே!

மதிக்கக் கற்றுத் தந்தாயே!
மடித்துக் கட்ட மனமில்லையே!
துதிக்கச் சொல்லித் தந்தாயே--சிறு
துரும்பைக் கூடக் கிள்ளலையே!

கனிந்த சொல்லே உதிர்த்தாயே!!
காயைக் கடித்தும் சுவைக்கலையே!
பணியப் படிச்சுத் தந்தாயே--மாறி
இணங்கி வாழப் புரியலையே!!

நன்மை போற்றிக் காத்தாயே!
தீமை ஏதும் அறியலையே!
எல்லா அறிவும் கொடுத்தாயே--உலக
இயல்பு ஏனோ விளங்கலையே!

பிரியம் ஊட்டி நிறைத்தாயே!
பிரிவை மீட்ட மறைத்தாயே!
கனவிலேனும் வருவாயோ!
காட்டி உன்னை அருள்வாயோ!

ஐந்து ஆண்டும் கடந்தாயோ!
அம்மா என்னை மறந்தாயோ!
எந்தையுடன் நீ கூடி
இணைந்தாயோ!கலந்தாயோ!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (16-Nov-13, 12:50 am)
பார்வை : 253

மேலே