உனக்கு எழுதும் கவிதைகள் 4
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கண்களை இமைக்காமல்
இமைக்கும் நேரத்தில்கூட
என் பார்வையிலிருந்து
நீ விலகிடலாகாது
என்பதற்காக !
[12]
*************
ஊரெங்கும் விழாக்கோலம்
தெருவெங்கும்
வண்ண விளக்குகளின்
அலங்காரம்
என் வீட்டில் வெறுமையே
விளையாடுகிறது
நான் தனிமை இருளில்
மூழ்கிக் கிடக்கிறேன்
வருத்தங்களே
என்னை
வடம் பிடித்து இழுக்கிறது
திருவிழாவிற்கு
அவசியம் வருவேன் என்று
உறுதி சொன்னவளை
இன்னும் காணவில்லை !
[13]
************
திருவிழாவில்
உன்னைக் காணவில்லையென
எல்லாப் பக்கமும்
எல்லாரும் தேடுகிறார்கள்
என் இதயத்தை விட்டுவிட்டு !
[14]
***********
ஊர்த்தலைவரிடம்
கோயில் திருவிழாவை
இன்னும் கொஞ்சம் நாள்
நீட்டிக்கலாம் என்று
சொன்னதற்காக
எல்லாரும் என்னை
வேடிக்கையாகப்
பார்க்கிறார்கள்
எப்படிப் புரியும்
இவர்களுக்கு
திருவிழா முடிந்ததும்
ஊர் திரும்பி விடுவாள்
என்னவள்
என்பது !
[15]
*************
கவிதைகள் தொடரும்....