தோழமை நெஞ்சங்களே இதை வாசியுங்கள் --4
வினா-அகன்:
விடியும் பொழுதுக்கு
என்ன சொல்லி
விடை பெற்றிருக்கும் இரவு..?
விடை-கொ.பெ.பி.அய்யா :
விடியலே நீ வாழ்க!இனி
வெளிச்சத்தில் உண்மையை
வெளிக்காட்டு எனச்சொல்லி
இரவு விலகியிருக்கும்.
வினா-அகன்:
மலர்ந்து உதிரும் மலரிதழ்கள்
என்ன சொல்லி
செடியிடம் விடை பெற்றிருக்கும்..?
விடை-கொ.பெ.பி.அய்யா :
அரும்பியதுக் காய்க்கட்டும் என
விரும்பியே செடியிடம்
விடை பெற்றிருக்கும்
உதிர்ந்த மலர்கள்.
வினா-அகன்:
உயிர் எதைக் கூறிவிட்டு
விடை பெற்றிருக்கும்
உடலிடமிருந்து..?
விடை-கொ.பெ.பி.அய்யா :
இதற்கு மேலும் வேண்டாம்
இந்த உலகம்.
இங்கே சொர்க்கம் இல்லை.
நரகம் மட்டுமே!
இருவருமே ஒருவரை ஒருவர்
விட்டு விடுதலையாவோம்-என
உடலும் உயிரும்
ஒன்றுக்கொன்று நன்றிக் கூறி
விடை பெற்றிருக்கும்.
வினா-அகன்:
மேலே என்ன சொல்லிவிட்டு
கீழியிறங்கிருக்கும் மழைத்துளிகள்..?
விடை-கொ.பெ.பி.அய்யா :
உனைக் காய்த்தப் பாவியரிடம்
உனக்காக நானழுகிறேன்
எனக்கூறி வானிடம் கண்ணீராய்
மழைத்துளி விடை பெற்று
வானின்று இறங்கியிருக்கும்..
வினா-அகன்:
நிலா இல்லாதபொழுது
விண்மீன்களிடம்
என்ன சொல்லியிருக்கும் வானம்..?
விடை-கொ.பெ.பி.அய்யா :
நட்சத்திரங்களை விரட்டி விட்டதாக
நிச்சயமில்லாக் கரைநிறை நிலா
எதனை சாமங்கள்தான் பாவம்!
வீண் பெருமை அடிதுக்கொண்டதோ!-என
நிலவில்லாதபோது மீன்களிடம்
வான் பேசியிருக்குமோ!
வினா-அகன்:
ஊழல் புரிபவனின் உள்மனம்
என்ன சொல்லிக் கொண்டிருக்கும்
சிக்கிடும் போது..?
விடை-கொ.பெ.பி.அய்யா :
எத்தனை முறை எச்சரித்தேன்
என்னை மதித்தாயா நீ?
வீணாசை விபரீத விளைவாச்சோ?-என
ஊழல் கைதியிடம் மனம்
சொல்லிக்காட்டி நொந்திருக்கும்.
வினா-அகன்:
சரியில்லாதவனுக்கு
வாக்காளன் வாக்களிக்கும் போது
வாக்குச்சீட்டு என்ன சொல்லியிருக்கும்..?
விடை-கொ.பெ.பி.அய்யா :
இவன் உன் கட்சிக்காரன்
என்ற தகுதியைவிட இவனிடம்
வேறென்ன தகுதியுண்டோ!
சிந்திக்க விட்டனரா உன்னை?
இன்னும் அடிமைதானா நீ?
பழகிப்போன உன்னிடம்
உன்னுரிமையை நீ
சரியாகப் பயன்படுத்தெனச்
சொன்னால் கேட்கவா போகிறாய்-என
வாக்காளனிடம் வாக்குச்சீட்டு
சொல்லித்தானிருக்கும்.
வினா-அகன்:
எழுதிமுடிக்கப்பட்ட எழுத்துகள்
விரல்களிடம்
என்ன சொல்லி நீங்கியிருக்கும்...?
பாவம் நீ!
விடை- கொ.பெ.பி.அய்யா
நல்லாத்தான் எழுதியுள்ளாய்.
நானும் பெருமை அடைகிறேன்--ஆனாலும்
நீ இருக்கும் வரை என்னைத்
தேடமாட்டார்களே!-என
விரல்களிடம் எழுத்து ஆதங்கப்பட்டிருக்கும். .
அன்பானவர்களே கவிதை என்பது எவருக்கும் தோன்றும்...ஊறும்...அன்றியும் ஒரு தலைப்பின் கீழ் படைப்பது என்பது பயிற்சியின் விளைவெனில் சிறப்பு அதிகம்..இவ்வகையில் ஒரு முயற்சி - இந்த வினா விடை படைப்பு...
முக்கிய குறிப்பு :
கொ.பெ.பி.அய்யா நானும் முன்கூட்டி இது குறித்து எந்தவொரு முன் உரையும் நிகழ்த்திக் கொள்ளவில்லை என்பது முக்கியமாக தோழமைகள் உணர்தல் நன்று...
அன்புடன் அகன் - கொ.பெ.பி.அய்யா ...